தி.மு.க. தலைவர் கலைஞர் மற்றும் தற்போதைய முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களை கடுமையாக விமர்சனம் செய்த அ.தி.மு.க. செய்தி தொடர்பாளர் மருது அழகுராஜ் அரசியலில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்திருக்கிறார்.

இது தொடர்பாக அவருடைய வலைதள பக்கத்தில், ‘‘எழுத்து, பேச்சு உள்ளிட்ட அரசியல் நடவடிக்கைகளில் இருந்து முற்றிலுமாக என்னை விடுவித்துக் கொள்கிறேன்.

இதுகாலம் வரை முதுகு தட்டிக்கொடுத்தவர்களுக்கு நன்றி… என் கருத்துக்களால் யாரேனும் காயப்பட்டிருந்தால் அதற்காக வருந்துகிறேன்’’ என பதிவிட்டிருக்கிறார்.

மருது அழகுராஜ் அரசியலில் இருந்து விலகியது பற்றி அ.தி.மு.க.வில் உள்ள சீனியர்கள் சிலரிடம் பேசினோம்… ‘‘சார், அதிகாரப் பதவியில் இருக்கும் ஆளுங்கட்சியிடம் ஒட்டிக் கொள்வதைத்தான் பலர் வாடிக்கையாக வைத்திருக்கிறார்கள். அம்மா (ஜெயலலிதா) இருக்கும்போது, பல காரியங்களை சாதித்தார் அழகுராஜா… அதே போல், எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக இருந்தபோதும் பல காரியங்களை சாதித்தவர் தற்போது அரசியலில் இருந்து விலகுவதாக அறிவித்திருக்கிறார்.

‘என்னுடைய கருத்துக்களால் யாரேனும் காயப்பட்டிருந்தால் வருந்துகிறேன்’ என்ற வார்த்தைதான் யோசிக்க வைக்கிறது. ஒருவேளை மருது அழகுராஜ் தி.மு.க.விற்கு சென்றாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை’’ என்றனர்.

அரசியலில் எல்லாம் சகஜமப்பா..?

By admin