திருச்சி கே.என்.ராமஜெயம் கொலை வழக்கில் 20 பேரிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்த இருப்பதுதான் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. மேலும் குற்றவாளிகளை நெருங்கிவிட்டதாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.

தமிழக நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் தொழிலதிபர் கே.என்.ராமஜெயம், கடந்த 2012-ம் ஆண்டு அதிகாலையில் நடைபயிற்சி சென்றபோது மர்ம நபர்களால் கடத்தப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டார். அவரது உடல் திருச்சி கல்லணை சாலையில் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வழக்கினை சி.பி.சி.ஐ.டி. மற்றும் சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரித்தனர்.

ஆனால் எந்த துப்பும் கிடைக்கவில்லை. அதன் பின்னர் ஐகோர்ட்டு உத்தரவின் பேரில், ராமஜெயம் கொலை வழக்கை எஸ்.பி. ஜெயக்குமார் தலைமையிலான சிறப்பு புலன் விசாரணைக்குழு விசாரித்து வருகிறது. வழக்கு தொடர்பாக சந்தேகப்படும் நபர்களை பிடித்து அதிரடியாக விசாரணை நடத்தி வருகிறார்கள். விசாரணைக்காக அழைத்து செல்லும் நபர்களை துன்புறுத்துவதாக, சிறை கைதிகள் மனித உரிமை மையத்தின் இயக்குநர் வக்கீல் புகழேந்தி, தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையத்தில் புகார் மனு அளித்தார். அதில், இந்த குழு சட்டத்துக்கு உட்பட்டு செயல்படுகிறதா? என்பதை கண்காணித்து மனித உரிமை மீறலை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதற்கிடையே தமிழக முதல்-அமைச்சரும், ராமஜெயம் கொலை வழக்கு சம்பந்தமாக விசாரணையின் போக்கு குறித்து அவ்வப்போது விசாரணை அதிகாரிகளிடம் கேட்டறிந்து வருகிறார். இந்த நிலையில் ராமஜெயம் கொலை வழக்கில் இதுவரை விசாரணை செய்ததில் சந்தேகத்திற்கு இடமான முறையில் உள்ள 20 சந்தேக நபர்கள் டி.ஜி.பி. ஷகில் அக்தர் முன்பு ஆஜராக உள்ளனர். அவர்களிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

ஏற்கனவே நீதிமன்றத்தின் அனுமதி பெற்றுள்ள சி.பி.சி.ஐ.டி. போலீசார் ராமஜெயத்தின் உதவியாளர்களாக வேலை பார்த்த மோகன், நந்தகுமார் ஆகியோருக்கு சி.பி.ஐ. உதவியுடன் சென்னையில் உள்ள சி.பி.ஐ. அலுவலகத்தில் உண்மை கண்டறியும் சோதனை நடத்தப்பட்டது. இந்த முறை 20 பேர் என்பதால் அவர்களிடம் சோதனைக்கு பிறகு வழக்கில் முக்கியம் திருப்பம் ஏற்பட வாய்ப்பு உள்ளது என்று எதிர்பார்க்கப்படுகிறது. கே.என்.ராமஜெயம் கொலை வழக்கில் தொடர்புடையதாக கருதப்படும் குற்றவாளிகளின் இறுதிப் பட்டியலை சிறப்பு புலனாய்வுக் குழு தயார் செய்துள்ளதாக தெரிகிறது.

சென்னையை சேர்ந்த எம்.எல்.ஏ. எம்.கே.பாலன் கடத்தல் மற்றும் கொலை வழக்கில் தொடர்புடைய, திண்டுக்கல்லை சேர்ந்த நரைமுடி கணேசன், தினேஷ், புதுக்கோட்டையை சேர்ந்த செந்தில்குமார், மோகன்ராம் உள்ளிட்ட 20 பேர் இப்பட்டியலில் இடம் பெற்றுள்ளனர். இவர்களிடம் விசாரணை நடத்த சி.பி.சி.ஐ.டி. டி.ஜி.பி. ஷகீல் அக்தர் நாளை திருச்சி வருகை தர இருக்கிறார். விரைவில், இவர்கள் அனைவருக்கும் உண்மை கண்டறியும் சோதனை நடத்தப்பட இருப்பதாக, சிறப்பு புலனாய்வுக் குழு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த சோதனை சென்னை அல்லது பெங்களூருவில் நடத்தப்படலாம் எனவும் கூறப்படுகிறது.

ராமஜெயம் கொலை வழக்கு சூடு பிடித்துள்ளது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal