ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஆறுமுகசாமி ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கைதான் பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தியிருக்கிறது.
ஆறுமுகசாமி ஆணைய அறிக்கை தொடர்பாக பேசிய டி.டி.வி. தினகரன், ‘‘சட்டசபையில் எதையும் முடிவு செய்யும் அதிகாரம் சபை தலைவருக்கு தான் உள்ளது. மக்கள் பிரச்னை எவ்வளவோ இருக்கும் நிலையில், நாற்காலிக்காக போராட்டம் நடத்துவது வருத்தமளிக்கிறது.
தூத்துக்குடி சம்பவம் நடந்த போது, பழனிசாமி தான் முதல்வராக இருந்தார். சம்பவத்துக்கு காரணமானவர் முதல்வராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாதிக்கப்பட்ட மக்கள் கோரிக்கை விடுத்தனர்.
நீதிபதியின் அறிக்கையும் அதைத் தான் சொல்வதால், தமிழக அரசும் சரியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். ஜெயலலிதாவின் மரணம் இயற்கையானது தான், என்பது அனைவருக்கும் தெரியும். சசிகலாவும் அறிக்கை குறித்து பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.
ஆறுமுகசாமியின் அறிக்கை, அரசியல்வாதி தயாரித்தது போல உள்ளது. உண்மை என்ன என்பது தமிழக மக்களுக்குத் தெரியும். இந்த அறிக்கையை, தமிழக அரசு என்ன செய்யப் போகிறது என்பதைப் பார்ப்போம். அரசியல் ரீதியாக தான் இந்த ஆணையமே அமைக்கப்பட்டது.
இந்த அறிக்கையை எதிர்த்து, பாதிக்கப்பட்டவர்கள் நீதிமன்றத்துக்கு நிச்சயமாகச் செல்வர். நீதிமன்றத்தில் இந்த ஆணைய அறிக்கை கண்டனத்துக்கு உள்ளாகலாம். டாக்டர்கள் அந்த நேரத்தில், எது சரியானதோ, அதைச் செய்கின்றனர்.
ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த டாக்டர்கள் மிகப் பெரிய வல்லுநர்கள். அவர்களை எல்லாம் அவமதிக்கும் வகையில் இந்த அறிக்கை உள்ளது. சி.பி.ஐ., விசாரணை நடத்தினால், இந்த அறிக்கை ஏன் தவறுதலாக வந்தது என்ற உண்மை வெளிப்படும்.’’இவ்வாறு அவர் தெரிவித்தார்.
பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் கூறும்போது, ‘‘தீபாவளி பண்டிகையின்போது, ஆம்னி பஸ் கட்டணம், விமானக்கட்டணத்துக்கும் மேலாக உள்ளது. அதிக கட்டணம் வாங்குவதை அரசு தடுக்க வேண்டும். ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணை அறிக்கையை, நீதிமன்றத்துக்கு எடுத்துச் சென்றால் ஒன்றுமே ஆகாது. தொழில்நுட்பமான விஷயங்கள் எதுவும் சொல்லப்படவில்லை. இதை வைத்து அரசியல் வேண்டுமானால் செய்யலாம். அதற்கு மேல் ஒன்றும் இல்லை.
அ.தி.மு.,க.,வினர் பிரச்னையில், சபாநாயகர் நடுநிலையாக முடிவெடுக்க வேண்டும். தூத்துக்குடி துப்பாக்கி சூடு பிரச்னையில், நீதிபதி அருணா ஜெகதீசன் அறிக்கையின்படி அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்’’இவ்வாறு, அவர் தெரிவித்தார்.