முதல்வர் ஸ்டாலினை சந்தித்து பேசியதை, முன்னாள் முதல்வர் பழனிசாமி நிரூபித்தால், அரசியலை விட்டு விலக தயாராக உள்ளதாக முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.

சட்டசபையில் ஜனநாயக விரோத போக்கை கடைபிடித்து வருவதாகக் கூறி, சபாநாயகர் மற்றும் தி.மு.க., அரசை கண்டித்து, சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நேற்று, அ.தி.மு.க., சார்பில், பழனிசாமி தலைமையில் உண்ணாவிரத போராட்டம் நடத்த திட்டமிடப்பட்டது. இதற்கு போலீசார் அனுமதி தரவில்லை. இதனால், பழனிசாமி மற்றும் முன்னாள் அமைச்சர்கள் உதயகுமார், வேலுமணி, ஜெயகுமார் உள்ளிட்டோர் தடையை மீறி, கறுப்பு நிற சட்டை அணிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சாலை மறியல் போராட்டத்தின் போது பேசிய பழனிசாமி, அ.தி.மு.க.,வை எதிர்கொள்ள, தி.மு.க., தலைவர் ஸ்டாலினுக்கு திராணி இல்லை. பன்னீர்செல்வத்தை பயன்படுத்தி, கட்சியை உடைக்க பார்க்கிறார். சட்டசபையில், ஸ்டாலினும் பன்னீர்செல்வமும் அரை மணி நேரம் சந்தித்து பேசியுள்ளனர். கட்சியை உடைக்க சதி நடக்கிறது; இது ஒருபோதும் நடக்காது எனக்கூறினார்.

இந்நிலையில், சென்னையில் நிருபர்களை சந்தித்த முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறுகையில், நேற்று பழனிசாமி தலைமையில் நடந்த போராட்டம் எனக்கு எதிரான போராட்டமாக நான் கருதவில்லை. ஏற்கனவே என்னுடன் இருப்பவர்கள் பழனிசாமிக்கு சவால் விடுத்துள்ளனர். என்ன சவால் என்றால், நான் தமிழக முதல்வரை சந்தித்ததை பழனிசாமி, நிரூபித்தால் நான் தமிழக அரசியலில் இருந்தே விலக தயார். நிரூபிக்கவில்லை என்றால் அவர் விலக தயாரா? என்று கேட்டுள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal