ஆண்கள்தான் குடித்து விட்டு நடுரோட்டில் அலம்பலில் ஈடுபடுகிறார்கள் என்றால், ஈரோட்டில் நடுரோட்டில் பெண் ஒருவர் குடிபோதையில் அலம்பலில் ஈடுபட்ட சம்பவம்தான் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

ஈரோடு மாவட்டம் அந்தியூர் தவிட்டுப்பாளையம் மூப்பனார் சிலை அருகே அந்தியூர் அத்தாணி செல்லும் பிரதான சாலையில் நேற்று இரவு 7 மணி அளவில் சுமார் 50 வயது மதிக்கத்தக்க ஒரு பெண் ரோட்டின் நடுவே படுத்து கூச்சலிட்டுக் கொண்டிருந்தார்.

இதை பார்த்தவர்கள் ஏதேனும் வாகனம் இடித்துவிட்டு நிற்காமல் சென்று விட்டார்களோ? என்று அருகில் சென்று அந்த பெண்ணை பார்த்தனர். அப்போது அந்தப் பெண் மது போதையில் சாலையில் படுத்து கொண்டு ரகளை செய்து கொண்டிருந்தது தெரிய வந்து. இதையடுத்து சாலையில் சென்ற நபர்கள் அந்தப் பெண்ணை பிடித்து ஓரமாக விட்டாலும் மீண்டும் சாலையில் நடுவே வந்து படுத்துக் கொண்டு ரகளை செய்தார்.

அப்போது அந்தியூர் பகுதியில் டாஸ்மார்க் மதுபான கடைகளில் அரசு நிர்ணயித்த விலையைக் காட்டிலும் கூடுதலாக பாட்டிலுக்கு பத்து ரூபாய் 15 ரூபாய் அதிகம் வாங்குவதாகவும், அதனை வாங்குவதற்கு பத்து ரூபாய் பத்தாமல் மற்றவர்களிடத்தில் கேட்டு மிகவும் சிரமப்பட்டு மதுபாட்டிலை வாங்கி குடிக்க வேண்டிய நிலை உள்ளது. இதனை நியாயமான விலைக்கு விற்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி சாலையில் படுத்து கூச்சலிட்டுக் கொண்டிருந்தார்.

பின்னர் அந்தியூர் போலீஸ் நிலையத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டு சப்-இன்ஸ்பெக்டர் கார்த்தி மற்றும் போலீசார் வந்து அந்த பெண்ணை சாலையை விட்டு ஓரமாக அழைத்து வந்து உணவு வாங்கிக் கொடுத்து வீட்டிற்கு அனுப்பி வைத்தனர்.

இதனால் தவிட்டுப்பாளையம் மூப்பனார் சிலை பகுதியில் அரை மணி நேரத்திற்கு மேலாக பரபரப்பு நிலவியது.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal