இன்று கைது செய்யப்பட்ட எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி சந்திக்க ஜி.கே.வாசனுக்கு அனுமதி மறுக்கப்பட்டதால் திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.
எதிர்க்கட்சி துணைத் தலைவராக ஆர்பி உதயகுமாரை அங்கீகரிக்காததைக் கண்டித்து, அதிமுக எம்எல்ஏ-க்கள், இன்று ஒருநாள் வள்ளூவர் கோட்டத்தில் அடையாள உண்ணாவிரத போராட்டம் நடத்தப் போவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் போலீசார் அனுமதி மறுத்திருந்தனர்.
இருந்தும் தடையை மீறி கருப்பு சட்டை அணிந்து எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக எம்எல்ஏ-க்கள், நிர்வாகிகள் வள்ளுவர் கோட்டத்தில் உண்ணாவிரதம் இருக்க முயன்றனர். இதனைத் தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அவரது ஆதரவு எம்எல்ஏ-க்களை போலீசார் கைது செய்தனர்.
மகளிருக்கான கட்டணமில்லா பேருந்தில் கைது செய்யப்பட்ட அழைத்து செல்லப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள் எழும்பூரில் உள்ள ராஜரத்தினம் மைதானத்தில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். அங்கு அவர்களுக்கு வழங்கப்பட்ட தண்ணீர், உணவை சாப்பிடாமல் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் ராஜரத்தினம் மைதானத்தில் அடைத்து வைக்கப்பட்டுள்ள எடப்பாடி பழனிசாமியை சந்திக்க தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் ஜிகே வாசன் வந்தார். அப்போது அவருக்கு போலீசார் அனுமதி மறுத்தனர். இதனால் ஜிகே வாசன் – காவல் துறையினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
பின்னர் திடீரென ஆதரவாளர்களுடன் சாலை மறியல் போராட்டத்தில் ஜிகே வாசன் ஈடுபட்டார். இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்து ஜிகே வாசன் கூறுகையில், ‘‘ தமிழக அரசு அடக்குமுறையில் ஈடுபட்டு வருகிறது. மேலும் சட்டமன்றத்திலும், வெளியிலும் நடப்பதை மக்கள் பார்த்து வருகிறார்கள். இது அரசின் வருங்கால பணிகளுக்கு ஏற்புடையதாக இல்லை. இது மக்கள் விரும்பாத செயல்களில் அரசு ஈடுபடுவது கண்டிக்கத்தக்கது ’’ என்று தெரிவித்தார். ஜிகே வாசன் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.