எதிர்க்கட்சித் துணைத் தலைவர் விவகாரத்தில் சபாநாயகர் அரசியல் செய்வதா எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றஞ்சாட்டியிருந்தார்.

இந்த நிலையில் தடையை மீறி உண்ணாவிரதம் இருக்க முயன்றதாக அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் பழனிசாமி உள்ளிட்ட ஆதரவு எம்எல்ஏ.,க்கள் கைது செய்யப்பட்ட நிலையில், அவர்கள் எழும்பூரில் உள்ள மைதானத்திற்கு கொண்டுவரப்பட்டனர். அங்கு செய்தியாளர்களிடம் பழனிசாமி பேட்டி கொடுக்கையில், பேட்டி கொடுக்க கூடாது என போலீசார் தடுத்ததால், ஆவேசமடைந்த எடப்பாடி பழனிசாமி, போலீசாரிடம் ஆவேசப்பட்டார்.

எடப்பாடி பழனிசாமி கைது செய்யப்பட்ட விவகாரம் தமிழகம் முழுவதும் எதிரொலிக்க, திருச்சியில் ஆயிரக்கணக்கான அ.தி.மு.க.வினர் முன்னாள் துணை மேயர் ஜெ.சீனிவாசன் தலைமையில் போராட்டத்தில் ஈடுபட்டனர். திருச்சியில் திடீரென அ.தி.மு.க.வினர் குவிந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. திருச்சி மாநகர காவல்துறையினர் பெரும்பாடு பட்டு, போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்தனர்.

எடப்பாடி பழனிசாமி கைதிற்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட முன்னாள் துணைமேயர் ஜெ.சீனிவாசனிடம் பேசினோம்.

‘‘சார், முதலமைச்சராக இருந்தபோதும் சரி, எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோதும் சரி எங்கள் தலைவர் எடப்பாடி பழனிசாமி சிறப்பாக மக்கள் பணியாற்றி வருகிறார். ஆனால், தி.மு.க. தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் ஆட்சி நடத்துவதிலும் சரி, கட்சியை வழி நடத்துவதிலும் தோல்வியடைந்துவிட்டார்.

இதன்காரணமாக அ.தி.மு.க.விற்கும், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கும் ஏதோவொரு வகையில் அரசியல் ரீதியாக குடைச்சல் கொடுத்துக் கொண்டு வருகிறார். எத்தனையோ போராட்டங்கள், தடைக்கற்கள் என அனைத்தையும் படிக்கற்களாக மாற்றி வெற்றி நடை போட்டவர் எடப்பாடி பழனிசாமி. வரும் நாடாளுமன்றத் தேர்தலில் அ.தி.மு.க. மாபெறும் வெற்றி பெற இருக்கிறது. இதற்காக அ.தி.மு.க.வை முடக்க முயற்சித்தால் பொங்கி எழுவோம்…. காட்டாற்று வெள்ளம் போல் கரைபுரண்டு செல்வோம்…’’ என்றார் ஆவேசமாக!

சென்னையில் எடப்பாடி பழனிசாமி கைது செய்யப்பட்ட விவகாரம் திருச்சியில் பெரிய போராட்டமாக வெடித்திருக்கிறது.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal