‘அ.தி.மு.க.வை உடைக்க மு.க.ஸ்டாலின் முயற்சிக்கிறார்’ என்று எடப்பாடி பழனிசாமி அதிரடி குற்றச்சாட்டை வைத்திருக்கிறார்

தடையை மீறி உண்ணாவிரதம் இருக்க முயன்றதாக அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் பழனிசாமி உள்ளிட்ட ஆதரவு எம்எல்ஏ.,க்கள் கைது செய்யப்பட்ட நிலையில், அவர்கள் எழும்பூரில் உள்ள மைதானத்திற்கு கொண்டுவரப்பட்டனர். அங்கு செய்தியாளர்களிடம் பழனிசாமி பேட்டி கொடுக்கையில், பேட்டி கொடுக்க கூடாது என போலீசார் தடுத்ததால், ஆவேசமடைந்த எடப்பாடி பழனிசாமி, போலீசாரிடம் ஆவேசப்பட்டார்.

சட்டசபையில் பேச அனுமதிக்காததை கண்டித்து, அ.தி.மு.க., -எம்.எல்.ஏ.,க்கள், இன்று(அக்.,19) ஒரு நாள் அடையாள உண்ணாவிரத போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்த நிலையில், போலீசார் அனுமதி மறுத்திருந்தனர். தடையை மீறி கருப்பு சட்டை அணிந்து உண்ணாவிரதம் இருக்க முயன்ற பழனிசாமி உள்ளிட்ட ஆதரவு எம்எல்ஏ.,க்களை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட அதிமுக எம்எல்ஏ.,க்கள் எழும்பூரில் உள்ள ராஜரத்தினம் மைதானத்திற்கு கொண்டுவரப்பட்டனர்.

அங்கு பழனிசாமி செய்தியாளர்களிடம் பேட்டி கொடுக்கும்போது, அங்கிருந்த போலீசார் பழனிசாமி பேட்டி கொடுக்கக்கூடாது என தடுத்தனர். இதனால் ஆவேசமடைந்த பழனிசாமி, பேட்டியை பாதியில் நிறுத்தி, எழுந்து நின்று போலீசாரிடம் கடிந்து பேசினார்.

பின்னர் மீண்டும் பேட்டியை தொடர்ந்தார். செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: ‘‘நேற்று நீதிமன்ற தீர்ப்பு மற்றும் அனைத்து ஆதாரங்களோடு விளக்கமளித்தும் சபாநாயகர் ஏற்றுக்கொள்ளவில்லை.

எதிர்க்கட்சி துணைத் தலைவராக ஆர்.பி.உதயகுமாரை தேர்ந்தெடுத்துள்ளோம். அவருக்கு இருக்கை ஒதுக்க வேண்டும் என கடிதம் கொடுத்தோம். ஆனால் 3 மாதமாக அந்த கடிதத்தை கடப்பில் போட்டுள்ளனர். சபாநாயகர் நடுநிலையாக செயல்பட மறுக்கிறார். எம்எல்ஏ.,க்கள் ஆதரவு அடிப்படையில் இருக்கை ஒதுக்க வேண்டும். சட்டசபையில் அதிமுக.,வினருக்கு அநீதி இழைக்கப்படுகிறது. நேற்று சட்டசபை முடிந்த பிறகு ஸ்டாலினும், ஓபிஎஸ்.,சும் அரைமணி நேரம் பேசிக் கொண்டிருந்தனர். அதிமுக.,வை சிதைக்க வேண்டும், உடைக்க வேண்டும் என்ற முதல்வர் ஸ்டாலினின் எண்ணம் பலிக்காது.

எம்எல்ஏக்கள் ஆதரவு தான் முக்கியம்; கட்சியை அடிப்படையாக சொல்கின்றார்கள்; எம்எல்ஏ.,க்கள் அடிப்படையில் தான் இருக்கை ஒதுக்க வேண்டும். சட்டசபை விதிகளில் இடம் இல்லை என்கிறார் சபாநாயகர். இது தவறான வாதம், சட்டத்தில் இடம் உள்ளது. திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீர்குலைத்துள்ளது. ஓபிஎஸ், மனோஜ் பாண்டியன், வைத்திலிங்கம் ஆகியோரை கட்சியை விட்டே நீக்கிவிட்டதாக கூறியும், ஓபிஎஸ்.,க்கு ஆதரவாக சபாநாயகர் செயல்படுகிறார்’’ இவ்வாறு அவர் கூறினார்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal