ஜெயலலிதா அப்போலோ மருத்துவமனையில் இருந்த போது, அவருக்கு செய்ய வேண்டிய சிகிச்சைகள் பற்றி எதுவும் அவரிடம் தெரிவிக்கப்படவில்லை. இதனை முற்றிலுமாக திட்டமிட்டு சசிகலா தரப்பு மறைத்திருப்பதாக ஆறுமுகசாமி ஆணையம் தெரிவித்துள்ளது.

ஜெயலலிதா மரணம் தொடர்பாக வெளியாகி இருக்கும் ஆறுமுகசாமி ஆணைய ரிப்போர்ட் தமிழ்நாட்டையே உலுக்கி உள்ளது. இந்த ரிப்போர்ட்ட 600 பக்கங்களுக்கும் மேல் உள்ளது. இதில் பல அதிர்ச்சி அளிக்கும் விவரங்கள் இடம்பெற்றுள்ளன.

சசிகலா. கேஎஸ் சிவக்குமார், அப்போதைய சுகாதாரத்துறை அமைச்சர்,விஜயபாஸ்கர். அப்போதைய சுகாதாரத்துறை செயலாளர் ஜெ ராதாகிருஷ்ணன் ஆகிய 4 பேரை குற்றம் செய்தவர்களாக கருதி விசாரிக்க வேண்டும் என்று இந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

இந்த அறிக்கையில், முதல்வர் மயக்கம் அடையும் முன்பே அவருக்கு 3 நாட்களாக காய்ச்சல் இருந்துள்ளது. அப்போதே அவருக்கு சரியாக சிகிச்சை அளித்து இருந்தால் அவர் மயக்கம் அடைந்து, சுயநினைவை இழந்து இருக்க மாட்டார். ஆனால் அவருக்கு வெறும் பாராசிட்டமால் மட்டும் கொடுத்துள்ளனர். அவருக்கு மருத்துவமனைக்கு வந்த போதே உடலில் பல பிரச்சனைகள் இருந்துள்ளது. பின்னர் சுயநினைவை பெற்ற அவர் காவிரி தொடர்பான கூட்டத்தில் ஆன்லைன் மூலம் கலந்து கொண்டார்.

அவருக்கு முக்கியமாக காவிரி கூட்டத்தில் கலந்து கொண்ட மறுநாள் நெஞ்சுவலி ஏற்பட்டு உள்ளது. அவரின் இதயத்தில் ஆராய்ச்சி செய்ததில் அதில் வெஜிடேஷன் ஏற்பட்டு உள்ளது. அதாவது தொற்று கிருமிகள் சேர்ந்து சதை போல குவிந்து வளர்ந்து உள்ளன. இதற்காக அவருக்கு சிகிச்சை செய்ய வேண்டும் என்று பரிந்துரை செய்யப்பட்டு உள்ளது. இதையடுத்து அவரை வெளிநாட்டிற்கு கொண்டு செல்ல டாக்டர் ரிச்சர்ட் பிலே பரிந்துரை செய்கிறார்.

ஆனால் இந்த விஷயம் எதுவும் ஜெயலலிதாவிடம் தெரிவிக்கப்படவே இல்லை. அதாவது அப்போது ஜெயலலிதா சுயநினைவுடன் இருந்துள்ளார். அவர் மீட்டிங்கில் எல்லாம் கலந்து கொண்டு இருக்கிறார். ஆனால் இதை எதையும் ஜெயலலிதா தெரிவிக்கவில்லை. அவர் சுயநினைவில் இருந்த போதும் அவரின் உடல்நல பிரச்சனைகள் பற்றி அவரிடமே யாருமே பேசவில்லை.

பொதுவாக நோயாளியிடம் அவருக்கு உள்ள பிரச்சனை தெரிவிக்கப்படும். ஆனால் அதை தெரிவிக்காமல், அவர் சுயநினைவில் இருந்த போதும் உண்மையை சொல்லாமல் மறைத்து உள்ளனர். அவருக்கு தகவல் தெரிவிக்காமல் இருளில் வைத்து உள்ளனர். இது அதிர்ச்சியாக இருக்கிறது. பொறுப்பு முதல்வரும், சுகாதாரத்துறை அமைச்சரும், அதிகாரிகளும் ஏன் இப்படி செயல்பட்டனர். இவர்கள் திட்டமிட்டு செயல்பட்டதாக தோன்றுகிறது என்று ரிப்போர்ட்டில் கூறப்பட்டு உள்ளது.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal