எதிர்க்கட்சித் துணைத் தலைவராக சட்டமன்றத்தில் ஆர்.பி.உதயகுமாரை நியமனம் செய்யாததையும், ஓ.பன்னீருக்கு இருக்கையை வேறு இடத்திற்கு ஒதுக்கி தரக்கோரியும் இன்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அவரது ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் சட்டமன்றத்தையே சிறிது நேரம் முடக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

அதிமுகவில் எடப்பாடி பழனிசாமிக்கும் ஓ.பன்னீர்செல்வத்துக்கும் இடையே கடந்த சில மாதங்களாகவே மோதல்போக்கு நீடித்து வருகிறது. கடந்த ஜூலை மாதம் எடப்பாடி தரப்பு நடத்திய பொதுக்குழுவில் ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் நீக்கப்பட்டனர்.

இதனை தொடர்ந்து ஓ.பன்னீர்செல்வம் வகித்து வந்த எதிர்க்கட்சித் துணைத் தலைவர் பதவியை முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமாரிடம் வழங்கினார் எடப்பாடி பழனிசாமி. இது தொடர்பாக சபாநாயகர் அப்பாவுவுக்கும் அவரது தரப்பில் மனு அளிக்கப்பட்டது.

இதேபோல் எடப்பாடி பழனிசாமி தரப்பு நியமனங்களை ஏற்கக்கூடாது என்று ஓ.பன்னீர்செல்வம் தரப்பிலும் அப்பாவுவுக்கு கடிதம் எழுதப்பட்டது. அதேபோல் பொதுக்குழுவை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் ஓ.பன்னீர்செல்வம் தரப்பு தொடர்ந்த வழக்கில், எடப்பாடி பழனிசாமி தரப்பு நடத்திய பொதுக்குழு செல்லாது என்று தீர்ப்பு வழங்கப்பட்டது.

இதனால் மீண்டும் ஓ.பன்னீர்செல்வம் வசம் மீண்டும் அதிமுக பதவிகள் வந்தன. ஆர்.பி.உதயகுமார் நியமனம் செல்லாமல் போனது. இதனை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் பொதுக்குழுவை செல்லும் என்றும் உத்தரவிட்டதால் மீண்டும் ஓபிஎஸ் நீக்கம் செல்லுபடியானது.

இந்த நிலையில் தமிழ்நாடு சட்டமன்றக் கூட்டத் தொடர் நேற்று தொடங்கியது. ஆனால், சபாநாயகர் அப்பாவு எடப்பாடி பழனிசாமியின் கோரிக்கையை ஏற்று ஆர்.பி.உதயகுமாரை எதிர்க்கட்சித் துணைத் தலைவராக அறிவிக்கவில்லை. ஓ.பன்னீர்செல்வத்துக்கும் அவரது ஆதரவாளர்களுக்கும் அதே இருக்கையே ஒதுக்கப்பட்டிருந்தது.

இதனை எதிர்த்து நேற்று சட்டமன்றக் கூட்டத்தை புறக்கணித்தனர் எடப்பாடி பழனிசாமி தரப்பினர். இன்றும் இதனை கண்டித்து இபிஎஸ் ஆதரவாளர்கள் சட்டமன்றத்திலேயே முழக்கமிட்டதால் அவர்களை வெளியேற்றுமாறு சபாநாயகர் அப்பாவு உத்தரவிட்டார். வெளியே வந்த எடப்பாடி பழனிசாமி நீதிமன்ற உத்தரவை சபாநாயகர் பின்பற்றவில்லை என்று குற்றம்சாட்டினார்.

இந்த நிலையில், எதிர்க்கட்சித் தலைவராக ஆர்.பி.உதயகுமார் அறிவிக்கப்படாததை எதிர்த்து நாளை உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட எடப்பாடி பழனிசாமி தரப்பு முடிவு செய்துள்ளது. சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே நாளை உண்ணாவிரதத்தில் ஈடுபட எடப்பாடி பழனிசாமி அனுமதி கோரி காவல் ஆணையர் அலுவலகத்தில் அதிமுக மனு அளித்துள்ளது.

அடுத்தடுத்த பாய்ச்சலுக்கு எடப்பாடி தரப்பு ஆயத்தமாகி வருவதுதான் ஆளுந்தரப்பை கொஞ்சம் அசைத்துப் பார்த்திருக்கிறது!

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal