அதிமுக 1972ம் வருடம் அக்டோபர் 17ம் தேதி தொடங்கப்பட்டது. இந்த கட்சியை எம்ஜிஆர் தொடங்கி 50 வருடங்கள் ஆகிவிட்டது. இந்த நிலையில்தான் 51ம் ஆண்டில் இன்று அடியெடுத்து வைக்கும் அ.தி.மு.க. ஆளுமைகளை இழந்து தத்தளித்துக் கொண்டிருக்கிறது.

எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா என்ற மாபெரும் தலைவர்களால் அ.தி.மு.க. என்ற கட்சி எஃகு கோட்டையாக செயல்பட்டது பல்வேறு இன்னல்களைத் தாண்டி! ஆனால், இன்றைக்கு மீண்டும் தமிழகத்தில் அ.தி.மு.க. வலுவான கட்சியாக மாறுமா என்பது மில்லியன் டாலர் கேள்வியாகவே இருக்கிறது.

எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா காலத்தில் கட்சியிலிருந்து ஒரு சில நிர்வாகிகள் விலகினாலும், அவர்களால் கட்சிக்கு ஒரு துளி பாதிப்புக் கூட ஏற்படாத வண்ணம் பார்த்துக் கொண்டனர். ஆனால், இன்றைக்கு ஜெயலலிதா மறைவிற்குப் பிறகு, அ.தி.மு.க.வில் உள்ள ஆளுமை மிக்க தலைவர்கள் தி.மு.க., பா.ஜ.க. பக்கம் சென்று வருவதுதான் உண்மையான ரத்தத்தின் ரத்தங்களை கொந்தளிக்க வைத்திருக்கிறது.

காரணம், அதிகாரத்தை யார் கைப்பற்றுவது என்ற போட்டியில், ஆளுமை மிக்கவர்கள் விலகி சென்று கொண்டிருக்கிறார். அதாவது, ஜெயலலிதா இருக்கும் போதே எ.வ.வேலு, சேகர்பாபு, ஈரோடு முத்துசாமி போன்றவர்கள் தி.மு.க.விற்கு சென்றனர். தற்போது, தி.மு.க. அமைச்சரவையில் முக்கியத்துறைகளை இவர்கள் கவனித்து வருகின்றனர்.

ஜெயலலிதா மறைவிற்குப் பிறகும் சில ஆளுமைகள் தி.மு-க.விற்கு சென்றதுதான், அக்கட்சியினரை மேலும் தொய்வடையச் செய்ததோடு, அ.தி.மு.க.வின் எதிர்காலமும் கேள்விக்குறியாக இருக்கிறது. அதனை சற்று விரிவாகப் பார்ப்போம்….

செந்தில் பாலாஜி

அ.தி.மு.க. ஆட்சியின் போது நான்கரை ஆண்டுகளுக்கும் மேலாக போக்குவரத்துத் துறை அமைச்சராக திறம்பட பணியாற்றியவர். அம்மா குடிநீர், மினி பஸ் என போக்குவரத்துத் துறையில் புதுமைகளை புகுத்தி ஜெயலலிதாவிடம் நற்பெயரை பெற்றவர். எந்தவொரு சவால்களையும் தனக்கான பாணியில் எதிர்கொண்டு வெற்றி பெறுபவர்.

கடந்த 2016 சட்டமன்றத் தேர்தலில் முக்கியத் தலைவர்கள் எல்லாம் தோற்ற நிலையில், அரவக்குறிச்சி சட்டமன்றத் தேர்தலை நிறுத்தி வைக்கும் அளவிற்கு கடும் சவாலை தி.மு.க.விற்கு கொடுத்தார். ஜெ. மறைவிற்குப் பிறகு டி.டி.வி. அணியில் இணைந்தார். அதன் பிறகு தன்னுடைய ‘எதிர்கால நலன்’ கருதி தி.மு.க.வில் இணைந்து, இன்றைக்கு மின்சாரம், மதுவிலக்கு ஆயத்தீர்வைத் துறை அமைச்சராக பணியாற்றி வருகிறார். இவரது இழப்பு அ.தி.மு.க.விற்கு பெரும் பின்னடைவுதான். இன்றைக்கு அ.தி.மு.க.வின் கோட்டையான கொங்கு மண்டலத்தை தி.மு.க.வின் கோட்டையாக மாற்றி வருகிறார்.

பாப்பிரெட்டிப்பட்டி பழனியப்பன்

தர்மபுரி, கிருஷ்ணகிரி போன்ற வடமாவட்டங்களில் அ.தி.மு-.க. என்ற மாபெரும் இயக்கத்தை வளர்த்தவர். கடந்த 2016 சட்டமன்றத் தேர்தலிலும் அ.தி.மு.க. வெற்றி பெற முக்கிய காரணமாக திகழ்ந்தவர். அ.தி.மு.க.வில் உயர்கல்வித்துறை அமைச்சராக ஐந்தாண்டு காலம் வலம் வந்தார். டி.டி.வி. அணியில் இருந்த இவர், ‘எதிர்கால நலன்’ கருதி தி.மு.க.வில் இணைந்திருக்கிறார்.

இன்றைக்கு தர்மபுரி, கிருஷ்ணகிரியில் தி.மு.க.வின் வெற்றிக்கு சில வியூகங்களை வகுத்துக் கொடுத்து வருகிறார். மாவட்டச் செயலாளர் என்ற பதவியை மு.க.ஸ்டாலின் கொடுத்திருக்கிறார்! இவருடைய மணம் மற்றும் அணி மாற்றம் அ.தி.மு.க.விற்கு பின்னடைவுதான்.

தங்க தமிழ்ச் செல்வன்

தேனி மாவட்டத்தில் ஓ-பிஎஸ்ஸுக்கு சிம்ம சொப்பனமாக இருந்தவர், டி.டி.வி. அணியில் இணைந்த தங்க தமிழ்ச் செல்வன் அக்கட்சியின் வளர்ச்சிக்காக பாடுபட்டார். அ.தி.மு.க.வின் எதிர்காலத்தை முன்கூட்டியே கணித்தவர், தி.மு.க.வில் இணைந்தார். இன்றைக்கு மாவட்டச் செயலாளர் பதவி கொடுத்து அழகு பார்த்திருக்கிறார் மு.க.ஸ்டாலின்.

தேனியில் ஓ-.பி.எஸ்.ஸுக்கு எதிராக ஒரு சில குரூப் இருப்பதால், இதனை தி.மு.க.விற்கு சாதகமாக பயன்படுத்தி அக்கட்சியை வளர்ச்சிப் பாதைக்கு கொண்டு செல்கிறார் தங்க தமிழ்ச் செல்வன்!

தோப்பு வெங்கடாச்சலம்

ஜெயலலிதா இருக்கும்போது அவரது நம்பிக்கைக்கு பாத்திரமாக இருந்தவர் தோப்பு வெங்கடாச்சலம். வருவாயத்துறை, சுற்சூழல் துறை அமைச்சராக திறம்பட பணியாற்றியவர். முக்கியத் தலைவர்களை எல்லாம், தி.மு.க.வின் மலைகளோடு மோதவிட்ட போது, தோப்பு வெங்கடாச்சலத்திற்கு மட்டும் 2016 சட்டமன்றத் தேர்தலில் பெருந்துறை தொகுதியிலேயே போட்டியிட வாய்ப்பு கொடுத்தவர் ஜெயலலிதா.

2016 சட்டமன்றத் தேர்தலின் போது, அ.தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையை பெருதுறையில் ஜெயலலிதா வெளியிட்டார். இதற்கு முக்கிய காரணமாக இருந்தவர் தோப்பு வெங்கடாச்சலம். ஈரோடு மக்களின் நீண்டநாள் கனவான அத்திக்கடவு & அவினாசி கூட்டுகுடிநிர் திட்ட பணிகளுக்கு வித்திட்டவர்.

தி.மு.க.வில் இணைந்த தோப்பு வெங்கடாச்சலத்திற்கு உரிய அங்கீகாரம் கொடுக்கவில்லை என அவரது ஆதரவாளர்களும், உடன் பிறப்புகளும் ஆதங்கப்பட்டாலும், எதையும் கண்டுகொள்ளாமல் கொடிவேரி, அத்திகடவு குடிநீர் திட்டத்தை பயன்பாட்டிற்கு கொண்டுவருதையே தனது கனவாக நினைத்து செயல்பட்டு வருகிறார். இவரது வருகையும் ஈரோடு மாவட்ட தி.மு.க.விற்கு பலம் சேர்க்கிறது!

வி.பி.கலைராஜன்

அ.தி.மு.க.வில் தி.நகர் எம்.எல்.ஏ.வாக இருந்தவர் வி.பி.கலைராஜன். எதற்கும் அச்சப்படாமல் அதிரடியாக களத்தில் இறங்கி வேலை பார்ப்பவர். செந்தில்பாலாஜி உடன் சேர்ந்து தி.மு.க.வில் ஐக்கியமாகி இருக்கிறார்.

நைனார் நாகேந்திரன்

அ.தி.மு.க.வில் இருந்து பலர் தி.மு.க.வில் இணைந்து கொண்டிருக்கையில், நெல்லை மாவட்டத்தில் அ.தி.மு.க.வின் வளர்ச்சிக்கு வித்திட்ட நைனார் நாகேந்திரன் பா.ஜ.க.வில் ஐக்கியமாகி எம்.எல்.ஏ.வும் ஆகிவிட்டார். சட்டசபையில் ஒரு கோவில் பிரச்னையை எழுப்பினார் நைனார். அப்போது குறுக்கிட்ட ஜெயலலிதா, ‘நைனார் நாகேந்திரன் முன்னாள் அமைச்சர் இந்த பணியை அவர் நினைத்தால் நொடிப் பொழுதில் செய்து முடிக்கலாம்’ என்ற தொனியில் பேசினார். உடனடியாக அந்தப் பணியை முடிப்பதாக சட்டப்பேரவையில் உத்தரவாதம் கொடுத்தார் நைனார். இவர் அ.தி.மு.க.வில் இருந்து பி.ஜே.பி.யில் இணைந்தது அக்கட்சிக்கு பலம்!

இப்படி அ.தி.மு.க.வில் ஆளுமைகளாக இருந்து தி.மு.க.வில் இணைந்தவர்களுக்கு முக்கிய பதவிகளை கொடுத்து வருகிறார் மு.க.ஸ்டாலின். ஆனால், அ.தி.மு.க. அதகாரப் போட்டியில் இன்று தத்தளித்துக் கொண்டிருக்கிறது. இதனை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி ‘பந்தாடி’ வருகிறது. பா.ஜ.க.!

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal