‘கண்ணுக்கு எட்டிய தூரம் வரை எதிரிகளே இல்லை’ என்று மறைந்த முதல்வர் ஜெயலலிதா கூறியிருந்தார். ஆனால், இன்றைக்கு அ.தி.மு.க. என்ற மாபெரும் இயக்கம் நான்காக உடைந்து சிதறிக் கிடக்கிறது!

அ.தி.மு.க.வில் உள்ள ஒவ்வொரு அடிமட்டத் தொண்டனும் ‘கட்சி எப்போது ஒன்றாக இணையும்?’ என்ற கேள்வியோடுதான் இருக்கிறார்கள். இது பற்றி மூத்த ரத்தத்தின் ரத்தங்களிடம் பேசினோம்.

‘‘அதிமுக கட்சி 1972ம் வருடம் அக்டோபர் 17ம் தேதி தொடங்கப்பட்டது. இந்த கட்சியை எம்ஜிஆர் தொடங்கி 50 வருடங்கள் ஆகிவிட்டது. இந்த நிலையில்தான் 51ம் ஆண்டில் படியெடுத்து வைப்பதை முன்னிட்டு அதிமுக சார்பாக மாபெரும் கொண்டாட்டங்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

அதிமுக அலுவலகத்தில் எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதையை செய்ய உள்ளனர். எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச்செயலாளராக இருப்பதால் இந்த விழாவை பெரிதாக கொண்டாட முடிவு செய்துள்ளார். தமிழ்நாடு முழுக்க இதற்காக பெரிய அளவில் விழா ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

ஆனால் இதுவரை இல்லாத மிக மோசமான, இக்கட்டான சூழ்நிலையை அதிமுக இந்த முறை எதிர்கொண்டு உள்ளது. எம்ஜிஆர் காலத்திலும் சரி, ஜெயலலிதா காலத்திலும் சரி.. அதிமுக பல்வேறு சவால்களை எதிர்கொண்டு உள்ளது. ஆனால் இந்த இரண்டு தலைவர்களுக்கும் இருந்த வலிமையான தோற்றம், மக்கள் ஆதரவு ஆகியவை, இந்த சவால்களை முறியடித்து கட்சியை மக்களிடம் கொண்டு செல்ல உதவியாக இருந்தது.

அப்படி ஒரு வசீகரமான தலைவர்.. எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்பட கூடிய தலைவர்தான் தற்போது அதிமுகவில் மிஸ்ஸிங். லோக்சபா தேர்தலில் படுதோல்வி.. சட்டசபை தேர்தலில் தோல்வி.. உள்ளாட்சி தேர்தலில் வரலாறு காணாத அளவிற்கு தோல்வி என்று மிக மோசமான தோல்விகளை அடுத்தடுத்து அதிமுக சந்தித்து உள்ள நிலையில்தான் இந்த ஆண்டுவிழாவை அக்கட்சி கொண்டாடுகிறது. எடப்பாடி பழனிசாமி கோஷ்டி.. ஓ பன்னீர்செல்வம் கோஷ்டி.. சசிகலா ஆதரவாளர்கள்.. டிடிவி தினகரன் ஆதரவாளர்கள் என்று 4 கோஷ்டிகளாக அதிமுக உடைந்து.. சிதறி.. துண்டு துண்டாகி உள்ள நிலையில்தான் இந்த ஆண்டுவிழா வந்துள்ளது. கட்சியில் இருந்து அடுத்தடுத்து மூத்த தலைவர்கள் வெளியேறுவது, பல்வேறு நிர்வாகிகள் நீக்கப்படுவது, அணிகள் மாறுவது, பல்வேறு வழக்குகளுக்காக உச்ச நீதிமன்ற படியேறுவது என்று அதிமுக மிக மோசமான நிலையை அடைந்து உள்ளது.

ஒரு கட்சி என்பது மேல்மட்டத்தில் நாம் காணும் தலைவர்கள் மட்டுமல்ல. கீழ்மட்டத்தில் இருக்கும் தொண்டர்களையும் சேர்த்ததுதான் கட்சி. எம்ஜிஆர் தொடங்கும் போதே இது தொண்டர்களுக்கான கட்சி என்று சொல்லிவிட்டுத்தான் தொடங்கினார். ஆனால் அதே கட்சியில்தான் தற்போது தொண்டர்கள் உச்சபட்ச சோர்வை அடைந்துள்ளனர்.

எனவே, தொண்டர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டாவது, தலைவர்கள் விரைவில் ஒரு நல்ல முடிவை எடுப்பார்களா என்று காத்திருக்கிறோம்’’ என்றனர்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal