கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டத்தில் உள்ள திருவல்லா பகுதியை சேர்ந்த 2 பெண்களை உடலை துண்டு துண்டாக வெட்டி புதைத்து நரபலி கொடுத்த விவகாரத்தில் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கேரள மாநிலம் பத்தினம்திட்டா மாவட்டம் திருவல்லா பகுதியில் வசித்து வந்த தர்மபுரியை சேர்ந்த பத்மா என்பவரை காணவில்லை என அப்பெண்ணின் உறவினர்கள் சில நாட்களுக்கு முன்னதாக போலீசில் புகார் அளித்தனர். அடுத்த சில நாட்களில் பத்மா துண்டு துண்டாக வெட்டப்பட்ட நிலையில் பிணமாக கிடந்ததை போலீசார் கண்டுபிடித்தனர்.
பத்மா கொலை தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்ட நிலையில், அதே பகுதியை சேர்ந்த ரோஸ்லின் என்ற பெண்ணும் காணவில்லை என புகார் எழுந்தது.
போலீசார் பத்மாவின் செல்போன் சிக்னலை ஆய்வு செய்தனர். அதில், அந்த செல்போன் முகவர் ஒருவரிடம் இருப்பது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து அம்முகவரை கைது செய்த போலீசார் விசாரணை செய்ததில், மருத்துவ தம்பதிகளுக்காக பத்மா, ரோஸ்லின் ஆகிய இரு பெண்களையும் நரபலி கொடுத்தது தெரியவந்தது.
அதாவது, எர்ணாகுளத்தில் திருவில்லா பகுதியில் உள்ள லைலா மற்றும் பகவந்த் சிங் தம்பதிகள், செல்வம் பெருக நரபலி கொடுக்க முடிவு செய்துள்ளனர். இதற்காக ஒரு முகவரிடம் தொடர்பு கொண்டு பெண்களை அழைத்து வந்து நரபலி கொடுக்க ஏற்பாடு செய்துள்ளனர்.
அதன்படி, பத்மா, ரோஸ்லின் ஆகிய இரு பெண்களையும் கடத்தி வந்து நரபலி கொடுத்துள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது. இது தொடர்பாக முகவர் மற்றும் லைலா, பகவல் சிங் ஆகிய மூவரையும் போலீசார் கைது செய்தனர்.
இந்த நரபலியானது ஆரன்முலா போலீஸ் ஸ்டேஷன் எல்லையில் நடைபெற்றதாக கேரள தென்மண்டல ஐஜி பிரகாஷ் தெரிவித்துள்ளார். மேலும் கைது செய்யப்பட்ட மூவரிடமும் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்திவருகின்றனர்.