வருமானத்துக்கு அதிகமாக ஆ.ராசா சொத்துக்களை குவித்ததாக சி.பி.ஐ. குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது!

2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு வழக்கில் தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு பெரும் இழப்பு ஏற்படுத்தியதாக ஆ.ராசா மீது சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்தது. இந்த வழக்கில் 2017-ம் ஆண்டு டெல்லி சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. அப்போது, 2ஜி வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர். இந்த தீர்ப்புக்கு எதிராக சி.பி.ஐ. டெல்லி ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்துள்ளது.

இதற்கிடையே, ஆ.ராசா மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் மற்றும் கூட்டாளிகள் உள்பட 16 பேர் மீது கடந்த 2015-ம் ஆண்டு ஆகஸ்டு 18-ந் தேதி அன்று வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்ததாக சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்தது. அதாவது 1999-ம் ஆண்டு பா.ஜனதா கூட்டணி அரசில் அமைச்சராக இருந்தது முதல் 2010 வரையிலான காலகட்டத்தில் ஆ.ராசா தனது அமைச்சர் பதவியை பயன்படுத்தி கூடுதலாக ரூ.27.92 கோடி அளவுக்கு வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக சி.பி.ஐ. குற்றம் சாட்டியது.

இதனடிப்படையில் ஆ.ராசா வீடு மற்றும் அலுவலகங்களில் சி.பி.ஐ. ரெய்டு நடந்தது. டெல்லி, சென்னை, திருச்சி, நீலகிரி, கோவை உள்ளிட்ட இடங்களில் இந்த சோதனை நடத்தப்பட்டது. 2ஜி வழக்கில் கிடைத்த சில ஆவணங்கள் அடிப்படையில் தான் இந்த சோதனை நடத்தப்பட்டதாக கூறப்பட்டது. சோதனையின் போது வருமான வரி கணக்குகள், சொத்து ஆவணங்கள், நிதிநிலை அறிக்கைகள் மற்றும் நிலையான வைப்பு ரசீதுகள் போன்ற ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

இந்த ஆவணங்கள் அடிப்படையில் பதிவு செய்யப்பட்ட வழக்கில் சி.பி.ஐ. விசாரணை நடத்தி வந்தது. இந்த விசாரணை தற்போது முடிவிற்கு வந்துள்ளது. 2015-ம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட வழக்கில் சுமார் 7 ஆண்டுகள் ஆன நிலையில் தற்போது சி.பி.ஐ. சிறப்பு கோர்ட்டில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

வருமானத்திற்கு அதிகமாக ரூ.5.53 கோடி வரை சொத்து சேர்த்துள்ளதாக ஆ.ராசா மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. வருமான ஆதாரங்களில் இருந்து 579 சதவீதம் அதிகமாக இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal