தங்கராணி ஸ்வப்னா விவகாரம் கடந்த சில மாதங்களாக ஓய்ந்திருந்த நிலையில் தற்போது அவர் எழுதிய சுயசரிதை மூலம் மீண்டும் கேரள அரசியலில் பரபரப்பை கிளப்பியுள்ளது.

திருவனந்தபுரத்தில் உள்ள ஐக்கிய அரபு அமீரக தூதரக முகவரிக்கு, கடந்த 2020ம் ஆண்டு ஜூலை மாதம் சரக்கு பெட்டிகளில் சுமார் 30 கிலோ கடத்தல் தங்கம் இருந்துள்ளது. இந்த கடத்தல் சம்பவம் தொடர்பாக கேரள அரசின் தகவல் தொழில்நுட்பப் பிரிவில் பணிபுரிந்து வந்த ஸ்வப்னா சுரேஷ், அவரது நண்பர் சந்தீப் நாயர், பி.எஸ். சரீத் உட்பட 12 பேரை அதிரடியாக கைது செய்தனர். இந்த கடத்தலுக்கு உடந்தையாக இருந்ததாக முதல்வரின் முதன்மைச் செயலாளர் சிவசங்கரனும் கைது செய்யப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதில், ஸ்வப்னா சுரேஷ், சிவசங்கரன் உள்ளிட்டோர் ஜாமீனில் உள்ளனர்

இதனிடையே, இந்த வழக்கில் தொடர்புடைய முக்கிய புள்ளிகளின் பெயர்களை வெளியிடுவேன் என ஸ்வப்னா சுரேஷ் கூறியிருந்தார். அதன்படி, பணமோசடி தடுப்பு நீதிமன்றத்தில் அவர் ரகசிய வாக்குமூலம் அளித்தார். அதில், தங்கக் கடத்தல் வழக்கில் கேரள முதல்வர் பினராயி விஜயன், அவரது மனைவி கமலா, மகள் வீணா உள்ளிட்டோருக்கு தொடர்பு இருப்பதாக தெரிவித்திருந்தார். இது கேரள அரசியலில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. ஆனால், முதல்வர் பினராயி விஜயன் இதனை திட்டவட்டமாக மறுத்தார்.

இந்நிலையில், ஸ்வப்னா விவகாரம் கடந்த சில மாதங்களாக ஓய்ந்திருந்த நிலையில் தற்போது அவர் எழுதிய சதியின் பத்ம வியூகம் என்ற சுயசரிதை மூலம் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதில், பினராயி விஜயன், அவரது மகள் வீணா, முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி சிவசங்கர், முன்னாள் அமைச்சர் ஜலீல் உள்பட பல முக்கிய பிரமுகர்களுக்கு எதிராக பல்வேறு பரபரப்பு தகவல்கள் இடம் பெற்றுள்ளன. கேரளாவில் மீண்டும் பினராய் விஜயன் அரசு வர வேண்டும் என்பதற்காகத் தான் தங்கக் கடத்தல் விவகாரத்தில் அரசுக்கோ, அரசு சார்ந்தவர்களுக்கோ எந்த தொடர்பும் இல்லை என்று சிறையில் இருந்தபடி வெளியிட்ட ஆடியோவில் தெரிவித்திருந்தேன். மீண்டும் இடது முன்னணி ஆட்சி வந்தால் தான் வழக்கிலிருந்து தப்பிக்க முடியும் என்றும் கூறி என்னை நம்ப வைத்து ஆடியோவை பதிவு செய்தார்கள்

கொரோனா பாதிக்கப்பட்ட நோயாளிகளின் விவரங்கள் அடங்கிய டேட்டாவை அமெரிக்காவிலுள்ள ஒரு நிறுவனத்திற்கு கொடுத்ததின் மூலம் முதல்வர் பினராயி விஜயனின் மகள் வீணா பல கோடிகள் சம்பாதித் துள்ளார். இதுதொடர் பாக முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் சைலஜாவுக்கும், சிவசங்கருக்கும் இடையே மோதல் ஏற்பட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார். மேலும், ஐஏஎஸ் அதிகாரி சிவசங்கர் சென்னையில் உள்ள பத்மநாபசுவாமி கோயிலில் எனது கழுத்தில் தாலி கட்டினார். அப்போது ஒருபோதும் என்னை கைவிட மாட்டேன் என்று வாக்குறுதி அளித்திருந்தார். 2 பேரும் கைதான பிறகு முதன்முதலாக என்ஐஏ அலுவலகத்தில் சிவசங்கரை பார்த்த போது எனது கழுத்தில் அவர் கட்டிய தாலி இருந்தது.

சுய சரிதையில் மேலும் கூறிய அவர் நான் யாருக்கு எதிராகவும் பாலியல் பலாத்கார் புகார் கூற விரும்பவில்லை. ஆனால், முன்னாள் அமைச்சரும், கேரள சட்டசபையில் முக்கிய நபராக இருந்தவருமான ஒருவர் என்னை உல்லாசத்திற்கு ஓட்டலுக்கு வருமாறு பலமுறை அழைத்துள்ளார். ஆனால் அதற்கு நான் உடன்படவில்லை. இது தொடர்பாக அவர் எனக்கு பலமுறை அனுப்பியது தொடர்பாக ஆதாரங்கள் இருப்பதாகவும், அதை நான் விசாரணை அதிகாரிகளிடம் ஏற்கனவே கொடுத்துவிட்டேன். இது போன்ற பல பரபரப்பு தகவல்கள் சொப்னாவின் சுய சரிதையில் இடம்பெற்றுள்ளன.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal