அ.தி.மு.க.வின் துணைப் பொதுச் செயலாளர் கே.பி.முனுசாமிக்கும், எடப்பாடி பழனிசாமி தரப்புக்கும் இடையே ஏற்பட்டுள்ள விரிசலை பயன்படுத்தி, கே.பி.முனுசாமிக்கு ஓ.பி.எஸ். தரப்புக்கு வலை விரிக்க ஆரம்பித்திருக்கிறது.

அதிமுகவில் ஜெயலலிதா மறைவிற்கு பிறகு ஏற்பட்ட அதிகார மோதல் சுமார் 5 ஆண்டுகள் கடந்தும் முடிவு கிடைக்காத நிலை தான் உள்ளது. கண்ணாடியில் ஏற்பட்ட விரிசல்போல் இருந்த ஓபிஎஸ்- இபிஎஸ் மோதல் வெட்ட வெளிச்சமாக மாறிவிட்டது. அதிமுக பொதுக்குழுவில் இடைக்கால பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்ட இபிஎஸ் , ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவு நிர்வாகிகளை ஒன்றன் பின் ஒன்றாக நீக்கி வருகிறார். இதன் காரணமாக அதிமுக தொண்டர்கள் விரக்தியில் இருப்பதாக கூறப்படுகிறது. அதிமுக பொதுக்குழுவிற்கு எதிராக ஓபிஎஸ் தொடர்ந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இதனிடையே ஓபிஎஸ்- இபிஎஸ் ஒருவர் மீது ஒருவர் மாறி, மாறி பொது வெளியில் விமர்சித்து வருகின்றனர். இந்தநிலையில் வருகிற 17 ஆம் தேதி தமிழக சட்டமன்ற கூட்டமானது நடைபெறவுள்ளது. இந்த கூட்டத்தில் ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் தரப்பு பங்கேற்கவுள்ளது.

சட்டமன்றத்தில் எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, துணை எதிர்கட்சிதலைவர் ஓ.பன்னீர் செல்வம் என அடுத்தடுத்து உட்காரும் வகையில் இடமானது ஒதுக்கப்பட்டிருக்கும். இந்தநிலையில் ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்களை அதிமுக கட்சியில் இருந்து நீக்கியதாகவும் அவர்களை அதிமுக உறுப்பினர்களாக சேர்த்துக்கொள்ள கூடாது என சபாநாயகருக்கு இபிஎஸ் தரப்பினர் கடிதம் கொடுத்துள்ளனர். நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருப்பதால் எந்த முடிவும் எடுக்க கூடாது எட ஓபிஎஸ் தரப்பு பதில் கடிதம் கொடுத்துள்ளது. இந்தநிலையில் வருகிற 17 ஆம் தேதி தொடங்கவுள்ள கூட்டத்தில் ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ்க்கு எந்த வகையில் இருக்கைகள் ஒதுக்கப்படவுள்ளது குறித்து கேள்வி எழுந்துள்ளது. இது தொடர்பாக கருத்து தெரிவித்த சபாநாயகர் அப்பாவு, இரண்டு பேரும் முன்னாள் முதலமைச்சர்கள் சட்டசபையில் கண்ணியமோடு நடந்துக்கொள்வார்கள் என தெரிவித்திருந்தார். மேலும் எந்த இடத்தில் இருக்கை ஒதுக்குவது என்பது சபாநாயகரின் அதிகாரத்திற்குட்பட்டது என தெரிவித்துள்ளார்.

இந்தநிலையில் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மாவட்ட செயலாளர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அதிமுக பொன்விழா ஆண்டை கொண்டாடுவது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது. மேலும் அதிமுக உட்கட்சி பிரச்சனை தொடர்பாகவும் அடுத்தகட்டமாக நீதிமன்ற வழக்குகளை கையாளுவது குறித்தும் விவாதிக்கப்பட்டது. மேலும் வருகிற 17 ஆம் தேதி தொடங்கவுள்ள சட்டமன்ற கூட்டத்தில் ஓபிஎஸ் குறித்தோ, அதிமுக உட்கட்சி பிரச்சனை குறித்தோ சட்டமன்ற உறுப்பினர்கள் எதுவும் பேசக்கூடாது எனவும் தொகுதி பிரச்சனை தொடர்பாகவும், திமுக அரசின் அராஜகங்கள் குறித்து மட்டுமே பேச வேண்டும் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதற்கிடையே நேற்று நடந்த கூட்டத்தில் கே.பி.முனுசாமி கலந்து கொள்ளவில்லை. இதுபற்றி மூத்த ரத்தத்தின் ரத்தங்களிடையே பேசியபோது, ‘‘சார், அ.தி.மு.க.வில் சி.வி.சண்முகத்திற்கு எடப்பாடி பழனிசாமி தரப்பு முக்கியத்துவம் கொடுப்பதை, அதே சமூகத்தைச் சேர்ந்த கே.பி.முனுசாமி ரசிக்கவில்லை.

சமீபத்தில் டெல்லி சென்றபோதுகூட துணைப்பொதுச் செயலாளரான கே.பி.முனுசாமியை அழைத்துச் செல்லாமல், சி.வி.சண்முகத்தை எடப்பாடி அழைத்துச் சென்றார். இந்த நிலையில்தான், அ.தி.மு.க.வில் தனக்கு முக்கியத்துவம் கொடுப்பதை கொஞ்சம் கொஞ்சமாக எடப்பாடி குறைத்து வருவதாக தனக்கு நெருக்கமானவர்களிடம் புலம்பினாராம் கே.பி.முனுசாமி!

எடப்பாடியாருக்கும், கே.பி.முனுசாமிக்கு இடையே ஏற்பட்டுள்ள விரிசலை பயன்படுத்தி, மீண்டும் கே.பி.முனுசாமியை ஓ.பி.எஸ். பக்கம் இழுக்கும் வேலையில் இறங்கியிருக்கிறது ஒரு டீம்!’’ என்றனர்.

சமீபத்தில்தான் எடப்பாடி அணியில் இருந்து மீண்டும் ஓ-.பி.எஸ். அணியில்ய வ.மைத்ரேயின் இணைந்தது குறிப்பிடத் தக்கது!

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal