‘அனைவரும் ஒன்று சேர்ந்து உழைக்க வேண்டிய காலம் இது; ஒரு சொல் வெல்லும். ஒரு சொல் கொல்லும். எனவே, தி.மு.க.,வினர் அனைவரும் கண்ணியத்துடன் நடந்து கொள்ள வேண்டும்’ என நேற்று நடந்த தி.மு.க. பொதுக்குழுவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.

ஆனால், அவரை உரையாற்றிக் கொண்டிருந்த மேடையிலேயே மூத்த நிர்வாகிகளான டி.ஆர்.பாலு, அமைச்சர் பொன்முடி ஆகியோர் செய்த காரியங்கள் முதல்வரை மீண்டும் முகம் சுளிக்க வைத்துவிட்டது என்கிறார்கள்.

இது பற்றி பொதுக்குழு மேடையை உற்றுக் கவனித்த மூத்த உடன் பிறப்புக்கள் சிலரிடம் பேசினோம்.

‘‘சார், பொதுக்குழு கூட்டத்தில் பேசிய முதல்வர், தி.மு.க.வல் அடிமட்ட நிர்வாகிகள் முதல், உயர் பொறுப்பில் இருக்கும் அமைச்சர்கள் வரை மக்களிடம் பேசும்போது மிகவும் கனிவாக பேசவேண்டும். எந்தவொரு சர்ச்சைகளிலும் சிக்காமல் செயல்படவேண்டும் என்று பேசிக்கொண்டிருந்தபோது, அமைச்சர் பொன்முடி சிரித்துக்கொண்டிருந்தார்.

சமீபத்தில் அமைச்சர் பொன்முடி, ‘ஓசி பஸ்’ குறித்து பேசிய சர்ச்சை இன்னும் ஓய்ந்த பாடில்லை. இது பற்றிதான் முதல்வர் பேசுகிறார் என்பதை அறிந்தும் அமைச்சர் சிரித்துக்கொண்டிருக்கிறார்.

அதே போல், நாடாளுமன்ற உறுப்பிர் டி.ஆர்.பாலு, பொதுக்குழு மேடையிலேயே ஒரு நபரை செருப்பை எடுத்து வந்து தன் காலின் அருகே வைக்கும்படி உத்தரவிட்டார். அந்த நபரும் செருப்பை குனிந்து அவர் காலருகே வைத்துவிட்டுச் சென்றார். இந்த வீடியோவும் வைரலாகி, தி.மு.க. தலைமைக்கு சர்ச்சையை ஏற்படுத்தியது.

மேலும் தலைவர் ஸ்டாலின் தற்போது இரண்டாவது முறைதான் தலைவராக பொறுப்பேற்றிருக்கிறார். அதற்குள் அடுத்து, இளைஞரணி கையில்தான் தி.மு.க.வின் எதிர்காலம் இருக்கிறது என்று எதற்காக பேசுகிறார்? டி.ஆர்.பாலுவின் இந்த சர்ச்சைப் பேச்சை யாரும் ரசிக்கவில்லை. உதயநிதியே, ‘தி.மு-.க.வில் உள்ள அனைத்து அணிகளும் முக்கியத்துவம் வாய்ந்தது’ என்று கூறிக்கொண்டிருக்கையில், இளைஞரணிக்கு மட்டும் டி.ஆர்.பாலு முக்கியத்துவம் கொடுத்து பேசுவதன் பின்னணி என்ன?

எனவே, மு.க.ஸ்டாலின் அருகில் எந்நேரமும் இருக்கும் மூத்த நிர்வாகிகளாலேயே அவருக்கு அவப் பெயர் ஏற்படுகிறது. இதனை முதல்வர் நேரடியாக கண்டிக்க வேண்டும். தவறினால், மக்கள் மட்டுமின்றி உடன் பிறப்புக்களே தவறாக புரிந்துகொள்வார்கள்’’ என்றனர்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal