திமுக பொதுக்குழு மேடையில் முதலமைச்சர் ஸ்டாலின் அருகில் அமர்ந்திருக்கும்போதே, பொருளாளர் டி.ஆர்.பாலுவிற்கு ஒருவர் காலணி எடுத்துத்தரும் காட்சி சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.

தமிழ்நாட்டில் அண்மைக்காலமாக திமுக அமைச்சர்கள் மற்றும் நிர்வாகிகள் பல்வேறு இடங்களில் பேசிய வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி சர்ச்சையை ஏற்படுத்தி வருகின்றன. அமைச்சர் பொன்முடி, ஒருவிழாவில் அரசுப் பேருந்துகளில் மகளிர் இலவசமாகப் பயணம் செய்வதை, `ஓசி’ எனக் குறிப்பிட்டது விமர்சனத்துக்குள்ளானது. அதைத் தொடர்ந்து உட்கட்சித் தேர்தல் குறித்து தொண்டர்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் எழுதிய கடிதத்தில், சிறு துரும்புக்கு மட்டுமல்ல, தூசுக்கும்கூட இடம் கொடுக்காத வகையில், கட்சியினர் கவனமுடன் செயல்பட வேண்டியுள்ளது என குறிப்பிட்டிருந்தார்.

மேலும் அமைச்சர்களுக்கும் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களுக்கும், உள்ளாட்சி நிர்வாகிகளுக்கும் தாம் செப்டம்பர் 26-ல் ஏற்கெனவே வெளியிட்ட அன்புக்கட்டளையை சுட்டிக்காட்டி எக்காரணம் கொண்டும் சொல்லிலும் செயலிலும் அலட்சியமான போக்கு வேண்டாம் என குறிப்பிட்டிருந்தார்.

அத்துடன், வெளிப்படும் சொற்கள், வெளிப்படுத்தும் உடல்மொழி, நாடி வரும் மக்களை அணுகும் முறை என அனைத்திலும் கவனமுடனும், பொறுப்புடனும், கண்ணியம் துளியும் குறைந்து விடாமல் செயலாற்றுங்கள் என்றும் கூறினார்.

இந்நிலையில் நேற்று நடைபெற்ற பொதுக்குழுக்கூட்டத்தில் பொதுக்கூட்ட மேடையில் அமர்ந்திருந்த கட்சியின் பொருளாளர் டிஆர் பாலுவின் இருக்கைக்கு ஒருவர் நேரடியாக சென்று அவரது காலுக்கு அருகே காலணியை வைத்துச் சென்றார். இந்த வீடியோ சமூகவலைதளத்தில் பகிரப்பட்டு கடும் விமர்சனத்தை ஏற்படுத்தி வருகிறது.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal