‘திருவாரூர் முத்துவேல் கருணாநிதி எனும் நான்…’ என்ற நூல் வெளியீட்டு விழாவில் ‘இது வெறும் ட்ரெய்லர்… அதுவும் (பொதுக்குழு) ஒரு நாள் நடக்கும்’ என அமைச்சர் அன்பில் மகேஷ் பேசியது, இளைஞரணியினரை உற்சாகப்படுத்தியிருக்கிறது.

முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நேர்காணல்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட கேள்வி மற்றும் பதில்களை ‘திருவாரூர் முத்துவேல் கருணாநிதி எனும் நான்…’ என்ற நூலை திமுக மாணவர் அணி செயலாளரும், எம்எல்ஏ-வுமான சி.வி.எம்.பி.எழிலரசன் தொகுத்துள்ளார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்துரை கொண்ட இந்த நூல் வெளியீட்டு விழா, அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் நடைபெற்றது. இந்த நூலை எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின் வெளியிட, பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பெற்றுக்கொண்டார்.

இதனைத்தொடர்ந்து பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பேசுகையில், இந்தக் கூட்டம் பொதுக்குழுவின் ட்ரெய்ல் கூட்டம் போல் உள்ளது. இளைஞரணி செயலாளரை நடுவில் அமர வைத்து பொதுக்குழுவின் ட்ரெய்லர் என்பது போல் இருக்கிறது என்றால், வேறு அர்த்தம் புரிந்துகொள்ளப்படும். ஆனால் அதுவும் ஒருநாள் நடக்கும் என்ற நம்பிக்கை உள்ளது.

இந்த நிகழ்ச்சி எங்கு நடக்க வேண்டும் என்று பேசியபோது, இதனை கலைஞர் அரங்கத்தில் நடத்திக் காட்டுவோம் என்று கூறினேன். ஏனென்றால், நாம் புதிதாக தலைமைச் செயலகம் கட்டினால் வேறு யாரோ பறித்துக் கொள்கிறார்கள், வள்ளுவர் கோட்டம் கட்டினால் வேறு யாரோ திறந்து வைக்கிறார்கள். ஆனால் இது நமது கோட்டை, நமது கோட்டையில் இருந்து கருணாநிதி பற்றி நூல் வெளியிடுவது சரியாக இருக்கும். யாரும் கேள்வி கேட்க முடியாது என்று கூறினேன். அதனை எழிலரசன் சரியாக செய்துள்ளார்.

முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியிடம் திருவாரூர் என்றதும் உங்கள் நினைவுக்கு வருவது எது என்று கேள்வி கேட்கப்பட்டுள்ளது. அதற்கு அவர், நான் படித்த உயர்நிலைப் பள்ளி என்று பதில் அளித்துள்ளார். இந்த பதில் துறையின் அமைச்சராக பெருமையாக உள்ளது. அதேபோல் கடவுள் மறுப்பு மற்றும் பல்வேறு நம்பிக்கையை எதிர்த்து பேசும் போது உறவினர்கள் எப்படி பார்க்கிறார்கள் என்று கேள்வி கேட்கப்பட்டுள்ளது. அதற்கு, அவரவர் கொள்கைகள் அவரவர்களுக்கு. அவர்களின் கொள்கைகளில் மனமாற்றம் வர வேண்டும் என்று தான் கூறுகிறேன். ஆனால் முழுமையாக மாற்றியே தீர வேண்டும் என்று நான் சொல்லவில்லை என்று தெரிவித்துள்ளார்.

எழுத்து, சமுதாய, அரசியல் பணி குறித்து கருணாநிதியின் கருத்து குறித்து கேட்கப்பட்டுள்ளது. அதற்கு எழுத்து பணி என்றால் பாரதியாரின் காதல் காதல் காதல் காதல் போயின் சாதல் என்று கூறியிருக்கிறார். அதேபோல் அரசியல் என்றால், அண்ணாவின் சொல்லான அது தோளில் போடும் துண்டு என்று தெரிவித்துள்ளார். அதேபோல் சமுதாய பணி என்றால், கைமாறு பார்க்காமல் கடமையை செய் என்ற பெரியாரின் பதிலை கூறியுள்ளார். அதேபோல் துரோகம் தொடர்பான அனைத்து கேள்விகளுக்கும் கருணாநிதி அளித்த ஒரே பதில், துரோகத்தை கடக்கும் சக்தி என்றும் உடன்பிறப்புகள் தான் என்று தெரிவித்துள்ளார்.

தேசிய நீரோட்டம் என்று சொல்லுகிறார்களே, அதனைப் பற்றி கருணாநிதியிடம் கேட்கப்பட்ட கேள்விக்கு, தேசியம், தேசியம் என்று வாய் கிழிய உபதேசம் செய்பவர்கள், காவேரியில் இருந்து கொஞ்சம் கூட தண்ணீர் தர மாட்டான் என்று நய்யாண்டியாக பதிலளித்துள்ளார். இதுபோல் உதயநிதி ஸ்டாலின் நய்யாண்டியாக பதில் அளிப்பதில் கைதேர்ந்தவர். அதனால் தான் அவரது வாழ்த்தில் அவர் கூறியுள்ளார்.

கருணாநிதியை பொறுத்தவரை கொள்கைகளுடன் சொற்களுடன் விளையாடியவர், முதலமைச்சர் ஸ்டாலின் செயல்பாடுகளால் விளையாடிக் கொண்டிருக்கிறார். உதயநிதி ஸ்டாலின் இரண்டிலும் விளையாடி வருகிறார் என்று தெரிவித்தார்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal