அ.தி.மு.க.வின் கோட்டையான கொங்கு மண்டலத்தை எப்படியாவது தங்கள் வசப்படுத்த வேண்டும் என்று தி.மு.க.வும், பா.ஜ.க.வும் போட்டிப் போட்டுக் கொண்டு கொங்கு மண்டலத்தை ‘கணக்குப்’ போட்டு வரும் நிலையில், எடப்பாடி பழனிசாமி சைலன்ட்டாக தென் மாவட்டங்களில் தனது செல்வாக்கை நிலைநாட்ட வியூகத்தை வகுத்து அதில் வெற்றியும் கண்டுவிட்டார்.

எடப்பாடி பழனிசாமியின் தென்மாவட்ட வியூகம் பற்றி அவருக்கு நெருக்கமான வட்டாரங்களில் பேசினோம்.

‘‘சார், சமீபத்தில் தென்மாவட்டத்தைச் சேர்ந்த தொழிலதிபரும் முக்குலத்தோர் சமூகத்தைச் சேர்ந்த முக்கிய பிரமுகருமான அய்யாதுரை பாண்டியன் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அ.தி.மு.க.,வில் இணைந்துள்ளார்.

தென்காசி மாவட்டத்தில் தனிச்செல்வாக்கோடு இருப்பவர் தொழிலதிபர் அய்யாதுரை பாண்டியன். இவர் கடந்த சட்டமன்றத் தேர்தலில் கடையநல்லூர் தொகுதியில் தி.மு.க.,வில் சீட் எதிர்பார்த்து வேலை செய்து வந்தார். குறிப்பாக கொரோனா ஊரடங்கின் போது ஸ்டாலின் அறிவுரையை ஏற்று தனது சொந்த நிதியில் அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய தொகுப்பு பைகளை பொதுமக்களுக்கு வழங்கினார். மேலும், தென்காசி மாவட்டத்தில் ஏழை வீட்டு பிள்ளைகளின் கல்விச் செலவை ஏற்று உதவி வருகிறார். இதனால் மக்கள் மத்தியில் இவருக்கு கட்சிக்கு அப்பாற்பட்டு செல்வாக்கு இருந்து வருகிறது.

இந்தநிலையில், கடந்த சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க.,வில் சீட் கிடைக்காததால் அ.ம.மு.க.,வில் இணைந்தார். அங்கு டி.டி.வி தினகரனின் செயல்பாடுகளால் அதிருப்தி அடைந்தவர், கட்சியிலிருந்து வெளியேறி, தனது தொழில்களை மட்டும் கவனித்து வந்தார். அதேநேரம், அய்யாதுரை பாண்டியன் பேரவை என்ற பெயரில் தென்காசி மாவட்டத்தில் உள்ள அனைத்து தொகுதிகளிலும் நலத்திட்ட உதவிகளை தொடர்ந்து செய்து வந்தார்.

தென்காசி மாவட்டத்தில் அய்யாதுரை பாண்டியனுக்கு உள்ள செல்வாக்கை அறிந்து பா.ஜ.க, அவரை இழுக்க திட்டமிட்டது. ஆனால், எடப்பாடி பழனிசாமி முந்திக் கொண்டு அய்யாதுரை பாண்டியனை அ.தி.மு.க.,வில் இணைத்துள்ளார்.

ஓ.பன்னீர்செல்வத்துக்கு செக் வைக்கும் விதமாக அவரது சமுதாயத்தைச் சேர்ந்தவரும், தென் மாவட்டங்களில் ஓரளவு செல்வாக்கு உள்ளவருமான அய்யாதுரை பாண்டியனை அ.தி.மு.க.,வுக்கு அழைத்து வருவதற்கான பணிகளை 6 மாதங்களுக்கு முன்பே தொடங்கிவிட்டார் எடப்பாடி பழனிசாமி. அய்யாதுரை பாண்டியனிடம் இ.பி.எஸ் தரப்பு எம்.எல்.ஏ.,க்கள் சந்தித்து பேசி, கட்சியில் சேர அழைப்பு விடுத்தனர். அப்போது அய்யாதுரை பாண்டியன் தரப்பில் முன் வைக்கப்பட்ட கோரிக்கைகளும் இ.பி.எஸ் தரப்பால் ஏற்றுக்கொள்ளப்பட்டது. அதன்பிறகு இ.பி.எஸ் தனது சேலம் வீட்டுக்கு வருமாறு அய்யாதுரை பாண்டியனுக்கு எம்.எல்.ஏ.,க்கள் மூலம் அழைப்பு விடுத்தார்.

இதனையடுத்து, விஜய தசமி அன்று எடப்பாடி பழனிசாமியின் தலைமையை ஏற்று அ.தி.மு.க.,வில் இணைந்துள்ளார் அய்யாதுரை பாண்டியன். அவருடன் 10,000 பேர் இணையவுள்ள நிலையில் அவர்களுடைய பெயர் விவரங்களுடன் கூடிய பட்டியல் எடப்பாடி பழனிசாமியிடம் வழங்கப்பட்டது. விரைவில் அவர்களுக்கு உறுப்பினர் அட்டை தயாரானதும் தென் மாவட்டத்தில் ஒரு பெரிய விழாவை நடத்த அய்யாதுரை பாண்டியன் திட்டமிட்டுள்ளார்.

ஓ.பன்னீர்செல்வத்தின் சமுதாயத்தை சேர்ந்த அய்யாதுரை பாண்டியன் எடப்பாடி பழனிசாமியின் தலைமையை ஏற்று அ.தி.மு.க.,வில் இணைந்திருப்பது கவனிக்கத்தக்கது.

மேலும் அய்யாத்துரை பாண்டியன் மூலம் தென்மாவட்டங்களில் மாற்றுக் கட்சியில் உள்ள அதிருப்தியாளர்களையும், அ.தி.மு.க. பக்கம் அழைத்து வருவதற்கான ஏற்பாடுகளும் மறைமுகமாக நடந்து வருகிறது. அய்யாத்துரை பாண்டியனும் எடப்பாடி பழனிசாமிக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்து தென் மாவட்டங்களை எடப்பாடியின் கோட்டையாக மாற்றிக் காட்டுவார்’’ என்றனர்.

சரியான சமயத்தில்…. சரியான நபரை பயன்படுத்தி காரியம் சாதிப்பதில் எடப்பாடியாரை மிஞ்ச முடியுமா என்ன..?

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal