தலைமைச் செயலகத்தில் உள்ள அமைச்சர்களின் அறைகள் காற்று வாங்குவதாக முதலமைச்சருக்கு கிடைத்த புகாரை அடுத்து அவர் இந்த அறிவுறுத்தலை வழங்கியுள்ளாராம்.

இதனிடையே தொகுதிப்பணி, மாவட்டத்தில் நடைபெறும் அரசு விழாக்கள், உள்ளூர் கட்சிப் பணி என ஏராளமான நிகழ்வுகள் இருப்பதால், வாரத்தில் 3 நாட்களாவது தலைமைச் செயலகத்தில் இருப்பது போல் அமைச்சர்கள் தங்கள் நிகழ்ச்சி நிரலை மாற்றி அமைக்கத் தொடங்கியுள்ளர்கள்.

அமைச்சர்களின் ஒவ்வொரு நடவடிக்கைகளையும் கண் கொத்தி பாம்பாக கவனித்து வரும் முதலமைச்சர் ஸ்டாலின் அண்மையில் அவர்களுக்கு பிறப்பித்துள்ள ஒரு உத்தரவு தான் கோட்டை வட்டாரத்தில் ஹாட் டாபிக். அதாவது தலைமைச் செயலகத்திற்கு கட்சிக்காரர்கள் யாரும் வருவதில்லை, காரணம் பெரும்பாலான அமைச்சர்கள் அவர்கள் அறைகளில் இருப்பதில்லை என்ற தகவல் முதல்வர் கவனத்திற்கு சென்றிருக்கிறது.

மேலும், ஒரு சில அமைச்சர்கள் சென்னையில் இருந்தாலும் பசுமை வழிச்சாலை பங்களாவை விட்டு வெளியே வருவதில்லை என்ற தகவலும் முதல்வருக்கு சென்றிருக்கிறது. இதையடுத்து இந்த விவகாரத்தை இப்படியே விட்டால் அது சரியாக இருக்காது எனக் கருதிய முதலமைச்சர் ஸ்டாலின், அமைச்சர்களை வாரத்திற்கு 4 நாட்களாவது தலைமைச் செயலகம் வருமாறு புதிய உத்தரவு போட்டிருக்கிறாராம்.

அண்மையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் கூட இதனை அவர் அறிவுரை நல்கும் விதமாக அமைச்சர்களுக்கு எடுத்துக் கூறியிருக்கிறார். அரசு விழாக்கள், தொகுதிப்பணி, மாவட்ட அரசியல் பணிகள் இருந்தால் வாரத்திற்கு 4 நாட்களுக்கு பதில் 3 நாட்களவது தலைமைச் செயலகம் வந்து செல்ல வேண்டும் என்பது அமைச்சர்களுக்கான புதிய இன்ஸ்ட்ரக்‌ஷன். இதனால் இப்போது எல்லா அமைச்சர்களும் தங்கள் நிகழ்ச்சி நிரல்களை மாற்றி அமைக்கத் தொடங்கியுள்ளனர்.

அதிமுக ஆட்சியின் போது தலைமைச் செயலகத்தில் எப்போதும் கட்சிக்காரர்களின் கூட்டம் நிரம்பி வழியும். ஆனால் அது போன்ற ஒரு நிலை இப்போது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதனிடையே முதல்வர் உத்தரவை ஏற்று அமைச்சர்கள் இனி வாரத்திற்கு குறைந்தபட்சம் 3 நாட்களாவது தலைமைச் செயலகத்தில் இருப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal