பிரதமர் மோடியும், உள்துறை அமைச்சர் அமித்ஷாவும், அ.தி.மு.க. விவகாரத்தில் தலையிட்டு ‘ஒற்றுமையுடன்’ செயல்பட ‘பஞ்சாயத்து’ செய்ய வேண்டும் என்று வைத்திலிங்கம் பேசியதை, அ.தி.மு.க.வின் அடிமட்டத் தொண்டன் கூட ரசிக்கவில்லை!
கடந்த ஜூன் மாதம் நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்திற்கு முன்பிருந்தே ஓ.பன்னீர் செல்வம்,எடப்பாடி பழனிச்சாமி இடையே விரிசல் அதிகரித்தது. பொதுக்குழு உறுப்பினர்கள், எம்எல்ஏக்கள் பெரும்பாலோனோர் ஓ.பன்னீர் செல்வம் பக்கம் நின்றனர்.
கடந்த ஜூலை 11 ஆம் தேதியன்று அதிமுக பொதுக்குழு எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் மீண்டும் கூடியது. ஓ.பன்னீர் செல்வம் தனது ஆதரவாளர்களுடன் அதிமுக அலுவலகம் சென்றார். ராயப்பேட்டை அவ்வை சண்முகம் சாலையே போர்களமானது. அதிமுக அலுவலகம் சூறையாடப்பட்டது. மாறி மாறி காவல்நிலைய படியேறி புகார் அளித்தனர். ஓபிஎஸ் தரப்பும், இபிஎஸ் தரப்பும் நீதிமன்ற படியேறியும் வழக்கு தொடுத்தனர்.
அதிமுகவில் இருந்து ஓ.பன்னீர் செல்வம் அவரது ஆதரவாளர்கள் கட்சியை விட்டு நீக்கப்பட்டனர். மாறி மாறி கட்சிக்குள் நியமனமும் நீக்கமும் நடைபெற்று வருகிறது. அ.தி.மு.க வினர் அனைவரும் ஒற்றுமையாகச் செயல்பட வேண்டும் என்பதே எங்கள் விருப்பம். இதற்கு முன்பு நடந்த அனைத்து கசப்புகளையும் தூக்கி எறிந்துவிட்டு ஒன்றுபட வேண்டும் என ஓ.பன்னீர் செல்வம் அழைப்பு விடுத்து வருகிறார். எடப்பாடி பழனிச்சாமியோ, அவருக்குப் பதவி வேண்டுமென்றால் அடிக்கடி அழைப்பு கொடுப்பார். அவரால் பதவி இல்லாமல் இருக்கமுடியாது. மற்றவர்களைப் பற்றி அவருக்குக் கவலை கிடையாது என்று கூறியுள்ளார்.
இதனிடையே எடப்பாடி பழனிச்சாமி எடப்பாடி பயணியர் மாளிகையில் கட்சி நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை நடத்தினார். பின்னர் எடப்பாடி நகராட்சி 12 வது வார்டு உறுப்பினர் ரவி தலைமையில் 150க்கும் மேற்பட்டோர் பல்வேறு மாற்று கட்சிகளில் இருந்து விலகி தமிழக எதிர்க்கட்சித் தலைவரும் அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர்.
அதிமுகவிற்கு எதிராக செயல்படும் நபர்களுக்கு கட்சியில் 100 சதவீதம் இடமில்லை. அதிமுகவை முடக்க வேண்டும் என நினைப்பவர்கள் காற்றில் கரைந்து போவார்கள். ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்ய கொண்டுவரப்பட்டுள்ள அவசர சட்டத்தை விரைந்து செயல்படுத்த வேண்டும் திமுகவின் மூத்த அமைச்சர் பொதுகூட்டத்தில் அவதூறாக பேசுவது வருத்தத்திற்குரியது.
திமுக அமைச்சர்கள் மக்களை அவதூறாக பேசுவது கண்டிக்கத்தக்கது. நிர்வாக திறமையற்ற முதலமைச்சர் தமிழகத்தை ஆண்டு கொண்டு உள்ளார். திமுக அரசின் திட்டமில்லாத நடவடிக்கையால் வரும் பருவ மழையினால் சென்னை மாநகரம் மிகவும் பாதிக்கப்படும். குடி மராமத்து திட்ட பணிக்காக திமுக அரசு எந்த ஒரு நிதியையும் ஒதுக்கவில்லை நீர் பற்றாக்குறையான தமிழகத்தில் ஒரு சொட்டு தண்ணீரை கூட வீணாக்காமல் சேமிப்பது நமது கடமை. அரசியல் பார்க்காமல் மக்கள் நலனுக்காக குடிமராமத்து திட்ட பணியை தொடர வேண்டும்.
மக்கள் நலனுக்காக அதிமுக அரசு கொண்டு வந்த நல்ல திட்டங்களை, திமுக அரசு தற்போது முடக்கி வருகிறது அதிமுக தமிழகத்தில் வலுவான எதிர்கட்சியாக உள்ளது. அதிமுக பொது செயலாளர் தேர்தல் விரைவில் நடைபெறும் என்றும் எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளார். உச்சநீதிமன்றத்தில் அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலை நடத்த எந்த அறிவிப்பும் வெளியிட வில்லை என்று இபிஎஸ் தரப்பில் கூறியுள்ள நிலையில் விரைவில் தேர்தல் நடத்தப்படும் என்று கூறியுள்ளார் எடப்பாடி பழனிச்சாமி. 2024 பொதுத்தேர்தலுக்கு முன்பாக ஓபிஎஸ், இபிஎஸ் இணைப்பு நடைபெறும் என்று பலரும் கூறி வரும் நிலையில் அதற்கு வாய்ப்பில்லை என்று அதிரடியாக அறிவித்துள்ளார் ஓ.பன்னீர் செல்வம்.