கடலூரில் நடந்த அரசு நிகழ்ச்சி ஒன்றில், அடிமட்டத் தொண்டனின் குமுறலைக் கேட்டு அமைச்சர் மா.சுப்பிரமணியன் சமரசம் செய்த சம்பவம்தான் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

கடலூர் மாவட்டம் கார்மாங்குடியில் சுகாதாரத்துறை சார்பில் புதிய திட்டப் பணிகளை தொடங்கி வைத்துப் பேசிய அமைச்சர் மா.சுப்ரமணியன், சுகாதாரத்துறை சார்பாக கடலூர் மாவட்டத்திற்கு மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் பற்றி பட்டியலிட்டார். தொடர்ந்து இன்னும் பல்வேறு விவகாரங்கள் பற்றி அவர் பேசிக் கொண்டிருக்கும் போதே, மேடைக்கு கீழ் இருந்த கூட்டத்தில் இருந்து ஆதங்க குரல் ஒலித்தது. ‘‘நான் 1966-லிருந்து திமுகவுக்காக கொடி பிடித்து வருகிறேன்’’ என சீனியர் நிர்வாகி ஒருவர் பெருங்குரலில் முழக்கமிட்டார்.

உடனடியாக அந்த நிர்வாகியிடம் கோபத்தை வெளிப்படுத்தாமல், உங்களை போன்ற உத்தம தொண்டர்களாலும், நிர்வாகிகளாலும் தான் திமுக கட்டிக்காக்கப்படுவதாக பாராட்டி, முதலில் அவரை நாற்காலி போட்டு அமர வைக்குமாறு அங்கிருந்தவர்களுக்கு அறிவுறுத்தினார். கட்சிக்காக இத்தனை ஆண்டுக் காலம் உழைத்த தன்னை நிற்க கூட விடாமல் சிலர் பின்னால் செல்லச் சொன்னதே அந்த பெரியவர் இவ்வாறு தனது ஆதங்கத்தை வெளிப்படுத்த காரணமாக கூறப்படுகிறது.

அமைச்சர் மா.சுப்ரமணியனை தவிர வேறு எந்த அமைச்சராக இருந்திருந்தாலும் அந்த இடத்தில் கோபப்பட்டிருக்க அதிக வாய்ப்புண்டு. கட்சிக்காரரின் நியாயமான ஆதங்கத்தை புரிந்துக் கொண்டதால் அமைச்சர் மா.சுப்ரமணியன் அந்த பெரியவர் மீது கோபப்படவில்லை. அண்மைக்காலமாக அமைச்சர்கள் தொடர்ந்து சர்ச்சையில் சிக்கி வருவதால் அவர்களுக்கு அறிவுரை நல்கும் விதமாக நேற்றுத் தான் முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம் ஒன்றை எழுதியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

கட்சிக்காரர்கள், பொதுமக்கள், வேண்டியவர்கள், வேண்டாதவர்கள், அதிகாரிகள், என பல தரப்பட்டோரையும் அணுசரித்து அரவணைத்துச் செல்வதே அமைச்சராக இருப்பவர்களுக்கு அழகு. அந்த வகையில் இதனை அமைச்சர் மா.சுப்ரமணியன் கடைபிடித்து வருவதால் சர்ச்சைகளில் இருந்து அவர் விலகிக் கொள்கிறார்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal