நடுவானில் சுமார் 3,500 அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்த விமானத்தில் துப்பாக்கி குண்டுகள் பாய்ந்து பயணி ஒருவர் படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மியான்மரில் ராணுவ ஆட்சி நடந்து வருகிறது. இதனால், ராணுவத்துக்கு எதிராக கிளர்ச்சி படைகள் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்நிலையில், மியான்மர் நேஷனல் ஏர்லைன்சுக்கு சொந்தமான ஒரு விமானம் மியான்மர் வான்வழியில் சுமார் 3,500 அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்தது. கிழக்கு கயா மாநிலத்தில் தலைநகரான லோய்கா விமான நிலையத்தில் தரையிறங்க அந்த விமானம் மெல்ல மெல்ல உயரத்தை குறைத்து கொண்டே வந்தது.

விமான நிலையத்திற்கு வடக்கே நான்கு மைல் தொலைவில் இருந்தபோது, திடீரென பயணி ஒருவர் மீது துப்பாக்கி குண்டு பாய்ந்தது. காதில் குண்டு பாய்ந்ததில் படுகாயமடைந்த அவருக்கு ரத்தம் கொட்டியது. உடனடியாக அவருக்கு முதலுதவி அளிக்கப்பட்டது.

நடுவானில் விமானம் பறந்து கொண்டிருக்கும்போது, குண்டு பாய்ந்ததால், பயணிகள் யாரேனும் துப்பாக்கிச்சூடு நடத்தினார்கள் என சோதித்து பார்த்தனர். யாரிடமும் துப்பாக்கி இல்லை. விமானத்தை சோதித்தபோது தரையில் இருந்து சுடப்பட்ட துப்பாக்கி குண்டு விமானத்தை தாக்கி, பயணியை பதம் பார்த்தது, கண்டுபிடிக்கப்பட்டது.

விமான நிலையம் அருகில் இருந்ததால், சில நிமிடங்களிலேயே விமானம் தரையிறங்கியது. இதையடுத்து, அந்த பயணி உடனடியாக லோகாவில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.

இதுதொடர்பாக, ராணுவ அரசின் செய்தித் தொடர்பாளர் மேஜர் ஜெனரல் ஜாவ் மின் துன் கூறுகையில், ‘‘அரசுக்கு எதிராகப் போராடும் பயங்கரவாதிகள் தான் இந்த துப்பாக்கிச் சூட்டை நடத்தி உள்ளனர். பயணிகள் விமானத்தின் மீது துப்பாக்கிச் சூட்டை நடத்தியது சட்டவிரோதம். அதை ஏற்க முடியாது’’ என்றார். இந்த குற்றச்சாட்டுகளைக் கிளர்ச்சி படை திட்டவட்டமாக மறுத்து உள்ளது. தங்களுக்கும் இதற்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்று கிளர்ச்சி படை தெரிவித்து உள்ளது.

நடுவானில் விமானத் தாக்குதலை தொடர்ந்து, லோகாவ் நகருக்கு செல்லும் அனைத்து விமானங்களும் காலவரையின்றி ரத்து செய்யப்படுவதாக மியான்மர் நேஷனல் ஏர்லைன்ஸ் அலுவலகம் அறிவித்து உள்ளது.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal