எடப்பாடி பழனிச்சாமி ஜனநாயக மாண்பை மறந்து சர்வாதிகார போக்குடன் செயல்பட்டு, அதிமுகவை அழிக்க நினைக்கிறார் என முன்னாள் எம்எல்ஏ தனியரசு குற்றம்சாட்டியுள்ளார்.
ஆரம்பம் முதலே சசிகலாவின் தீவிர ஆதரவாளராக தனியரசு இருந்து வருகிறார். சசிகலாவுக்கு ஆதரவாக ஓபிஎஸ் குரல் கொடுக்க தொடங்கியதில் இருந்து எடப்பாடியை விமர்சிதத்தும், ஓபிஎஸ்க்கு ஆதரவாகவும் தனியரசு குரல் கொடுத்து வருகிறார். இந்நிலையில், கரூரில் தனியார் திருமண மண்டபத்தில் கொங்கு இளைஞர் பேரவை அமைப்பின் மாநில பொதுக்குழுக்கூட்டம் நடைபெற்றது. இதில், கரூர் மாவட்டச் செயலாளர் அருள் தலைமையில் நடைபெற்ற இந்த பொதுக்குழுக்கூட்டத்தில் அந்த அமைப்பின் நிறுவனத் தலைவர் முன்னாள் எம்எல்ஏ தனியரசு கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
இதனையடுத்து, செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த தனியரசு;- அதிமுகவில் ஓபிஎஸ் பாதிக்கப்பட்டு இருக்கிறார். விதிப்படி, சட்டப்படி அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் தான். ஏற்கனவே அதிமுகவில் தொண்டர்கள் ஏற்றுக்கொண்ட இரட்டை தலைமையை மறந்து, பொதுக்குழுவைக் கூட்டி ஓபிஎஸ்-ஐ வஞ்சித்து ஒற்றை தலைமை கோட்பாட்டை எடப்பாடி பழனிசாமி கொண்டு வந்தார்.
தற்போது ஒற்றை தலைமை குறித்து நீதிமன்றங்களை நாடி வருகின்றனர். தற்போது தலைமை பொறுப்பிற்காக அதிமுக ஊசலாடுகிறது. ஓபிஎஸ்-ஐ போலவே சசிகலாவும், தினகரனும் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள் என்பதற்காகவே அவர்களுக்கும் ஆதரவளிக்கிறேன். பிரிந்து கிடக்கும் 4 அணிகள் இணைந்து செயல்பட்டால் ஜெயலலிதா ஆட்சிக் காலத்திலிருந்தது போல, அதிமுக மிகவும் வலுவான கட்சியாக இருக்கும். ஆனால், எடப்பாடி பழனிச்சாமி ஜனநாயக மாண்பை மறந்து சர்வாதிகார போக்குடன் செயல்பட்டு, அதிமுகவை அழிக்க நினைக்கிறார் என்று தனியரசு குற்றம்சாட்டியுள்ளார்.