குஜராத் மற்றும் இமாசல பிரதேச மாநிலங்களில் தற்போதைய சட்டசபைகளின் பதவிக்காலம் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் நிறைவடைகிறது.

எனவே இந்த மாநிலங்களில் இந்த ஆண்டு இறுதியில் தேர்தல் நடைபெறுகிறது. இதற்காக இரு மாநிலங்களிலும் ஆளும் பா.ஜனதா மற்றும் எதிர்க்கட்சியான காங்கிரஸ் போன்ற கட்சிகள் தீவிர பிரசாரங்களை முன்னெடுத்து உள்ளன. குஜராத்தில் ஆம் ஆத்மியும் தங்கள் களத்தை தயார்படுத்தி வருகிறது. அரசியல் நோக்கர்கள் இடையே பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி உள்ள இந்த தேர்தலை முன்னிட்டு இரு மாநிலங்களிலும் ஏ.பி.பி. நியூஸ் மற்றும் சி வோட்டர் இணைந்து கருத்துக்கணிப்புகளை நடத்தி உள்ளன. இந்த கருத்துக்கணிப்பு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன.

இதில் முக்கியமாக குஜராத்தில் மீண்டும் பா.ஜனதாவே ஆட்சியை பிடிக்க வாய்ப்பு இருப்பதாகவும், இமாசல பிரதேசத்திலும் ஆட்சியை தக்க வைக்கும் என்றும் தெரிய வந்து இருக்கிறது. பிரதமர் மோடியின் சொந்த மாநிலமான குஜராத்தை பொறுத்தவரை, மொத்தமுள்ள 182 இடங்களில் ஆளும் பா.ஜனதா 135 முதல் 143 இடங்கள் வரை கைப்பற்றும் என தெரிய வந்துள்ளது.

தற்போது 99 உறுப்பினர்களையே வைத்திருக்கும் அந்த கட்சி வருகிற தேர்தலில் எம்.எல்.ஏ.க்கள் எண்ணிக்கையை அதிகரிக்கும் என கூறப்படுகிறது. காங்கிரஸ் கட்சிக்கு 36 முதல் 44 இடங்கள் வரையும், ஆம் ஆத்மிக்கு 2 இடங்கள் வரையும் கிடைக்கும் என கருத்துக்கணிப்பில் கூறப்பட்டு உள்ளது. 68 இடங்களை கொண்ட இமாசல பிரதேசத்தில் 37 முதல் 45 இடங்கள் வரை பா.ஜனதா பெறும் எனவும், காங்கிரசுக்கு 21 முதல் 29 இடங்கள் வரை கிடைக்கும் எனவும் கூறப்பட்டு உள்ளது.

இரு மாநிலங்களிலும் வேலையில்லா திண்டாட்டம் மற்றும் மின்சாரம், குடிநீர், சாலை வசதி போன்ற அடிப்படை கட்டமைப்புகளில் குறைபாடு முக்கிய பிரச்சினைகளாக உள்ளன. இதை கடந்தும் பெருவாரியான வாக்காளர்கள் இரு மாநிலங்களிலும் ஆளுங்கட்சியை தேர்வு செய்வதில் ஆர்வம் காட்டியுள்ளதாக கருத்துக்கணிப்பு முடிவுகள் தெரிவித்து உள்ளன.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal