திமுக அரசின் அராஜகப் போக்கினால் மக்களுக்கு பாதுகாப்பு இல்லாத ஒரு சூழல் அமைந்துள்ளது. இந்த உயிரிழப்புக்குக் காரணமான அனைவரின் மீது திமுக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.
புதுக்கோட்டை மாவட்டம், கீரமங்கலத்தைச் சேர்ந்தவர் நீலகண்டன். இவர் மனைவி கோகிலா. இவர் திடீரென வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். . இதற்கிடையே கோகிலா, இறப்பதற்கு முன்பு அவர் எழுதி வைத்திருந்ததாகக் கிடைத்த ஒரு கடிதம் ஒன்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. அந்தக் கடிதத்தில், “நான் கோகிலா, என் சாவுக்கு எம்.எம்.குமார், அவர் மனைவி புவனேஸ்வரி ஆகியோர்தான் காரணம். திமுக கட்சியின் அராஜகம் மற்றும் பவரை குமார் எங்களிடம் காண்பித்துவிட்டார். செய்யாத தவற்றுக்காக பொய் வழக்குப் போட்டு, கீரமங்கலம் ஸ்டேஷனில் என்னையும் எனது கணவரையும் மிகுந்த மனஉளைச்சலுக்கு ஆளாக்கிவிட்டதாக தெரிவித்துள்ளார். அதிகாலை 5 மணிக்கே போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்துப் போய் என்னை மிரட்டினார்கள்.
போலீஸ் தொடர்ந்து எங்களை மிரட்டி வருகின்றனர். கடைசியாக போலீஸ் என்னை திருச்சி சிறையில் அடைப்பதாகக் கூறிவிட்டுச் சென்றனர். இதன் காரணமாக எனது கணவன் மன உளைச்சல் அடைந்து கடந்த 10 நாட்களாக வீட்டிற்கு வரவில்லையென தெரிவித்துள்ளார். எனவே மனஉளைச்சலில் இந்த முடிவை எடுக்கிறேன்” இந்த கடிதத்தைக் கைப்பற்றிய உறவினர்கள், காவல் நிலையம் முன் திரண்டனர். கடிதத்தை வைத்துக் கொண்டு, கோகிலா கூறியுள்ள சம்பந்தப்பட்ட புவனேஸ்வரி, குமார், பொய் வழக்கு பதிவுசெய்து மிரட்டிய காவலர்கள்மீது நடவடிக்கை எடுக்கக் கோரிமறியல் போரட்டத்தில் ஈடுபட்டனர். இந்தநிலையில் இது தொடர்பாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்,
புதுக்கோட்டை மாவட்டம் மேற்பனைக்காடு கிராமத்தைச் சேர்ந்த சகோதரி கோகிலா திமுக நிர்வாகியின் தூண்டுதலின் பெயரால் பதியப்பட்ட பொய் வழக்கினால் ஏற்பட்ட மனவேதனை காரணமாக உயிரைத் துறந்துள்ளார் என்ற செய்தி மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது. திறனற்ற திமுக அரசின் அராஜகப் போக்கினால் மக்களுக்கு பாதுகாப்பு இல்லாத ஒரு சூழல் அமைந்துள்ளது. இந்த உயிரிழப்புக்குக் காரணமான அனைவரின் மீது திமுக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் மற்றும் உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு 25 லட்சம் ரூபாய் நஷ்ட ஈடாக வழங்க வேண்டும் என அண்ணாமலை கேட்டுக்கொண்டுள்ளார்.