பீஹாரில், ‘குறைந்த விலைக்கு சானிட்டரி நாப்கின் வழங்குவீர்களா?’ என்று கேட்ட பள்ளி மாணவிகளிடம், ‘இப்போ நாப்கின் கேட்பீர்கள்; கடைசியில் காண்டம் (ஆணுறை) கூட எதிர்பார்ப்பீர்கள்’ என பெண் ஐஏஎஸ் அதிகாரி அநாகரிக முறையில் பேசியது சர்ச்சையாகியுள்ளது. இந்த அதிகாரிக்கு பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

பீஹார் மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு நிறுவனத்தின் இயக்குநராக இருப்பவர், ஐ.ஏ.எஸ். அதிகாரி ஹர்ஜோத் கவுர். இவர் பாட்னாவில் நடைபெற்ற ‘அதிகாரம் பெற்ற மகள்கள், வளமான பீகார்’ என்ற கருத்தரங்கில் பங்கேற்றார். இதில், 9, 10ம் வகுப்பு படிக்கும் மாணவிகளுடன், பெண் ஐஏஎஸ் அதிகாரி ஹர்ஜோத் கலந்துரையாடினார்.

அப்போது மாணவிகள் சிலர், ஹர்ஜோத் கவுரிடம் சந்தேகங்களை கேட்டனர். அதில் ஒரு மாணவி, ‘அரசு நிறைய இலவசங்களை வழங்குகிறது. எங்களுக்கு ரூ.20 முதல் 30 வரையிலான சானிட்டரி நாப்கின்களை அரசால் வழங்க முடியாதா?’ எனக் கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்த ஹர்ஜோத், ‘இன்று நாப்கின் கேட்பீர்கள், நாளைக்கே ஜீன்ஸ் பேன்ட் கொடுங்கள் என்பீர்கள். பிறகு ஷூக்கள் வேண்டும் என்பீர்கள், முடிவில் குடும்ப கட்டுப்பாடு என்று வரும்போது, உங்களுக்கு இலவச காண்டம்களை அரசே தர வேண்டும் என கூறுவீர்கள்.

ஏன் அரசிடம் இருந்து பொருட்களை எடுத்து கொள்ள வேண்டிய அவசியம் உங்களுக்கு உள்ளது? இந்த எண்ணம் தவறானது’ என மாணவிகளிடம் அருவருக்கத்தக்க வகையில் பதிலளித்தார். ஆனாலும் அதே மாணவி தொடர்ந்து, ‘அரசை தேர்ந்தெடுக்க ஓட்டளிப்பது இந்த மக்கள்தானே, தேர்தலின்போது எண்ணற்ற வாக்குறுதிகளை அரசு அளித்து வருவதாக’ கூறி பதிலடி கொடுத்தார்.

இதனால் ஆத்திரமடைந்த ஹர்ஜோத் கவுர், ‘அப்படியெல்லாம் நினைத்துக் கொண்டிருந்தால், நீங்கள் ஓட்டளிக்கவே வேண்டாம். பாகிஸ்தானை போலவே மாறிவிடுங்கள்’ என மிகவும் அலட்சியமாக பேசினார்.

இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றன. பலரும் பெண் ஐஏஎஸ் அதிகாரி ஹர்ஜோத் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர். மாணவிகளிடம் இது போன்று அநாகரிகமாக பேசி கேவலப்படுத்தியுள்ளதாக கருத்து தெரிவித்துள்ளனர்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal