அதிகாரம் மிக்க மாவட்டச் செயலாளர் பதவியில் இருப்பவர், ஒன்றியச் செயலாளர் பதவியை தன் வசம் வைத்திருப்பதுதான் குழப்பத்தை ஏற்படுத்தியிருக்கிறது. ஆம்… கோவையில் ஒன்றியச் செயலாளர் பதவியும், மா.செ. பதவியும் ஒருவருக்கு அறிவிக்கப்பட்டிருப்பதுதான் உ.பி.க்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது.

தி.மு.க.வில் அமைச்சர் பதவிக்கு இணையான புதிய மாவட்டச் செயலாளர்கள் பட்டியலை திமுக தலைமை நேற்றிரவு வெளியிட்டுள்ளது. இதில் மாற்றம் செய்யப்பட்ட 7 மாவட்டச் செயலாளர்களில் கோவை மாவட்டத்தில் இருவர். கோவை தெற்கு மாவட்ட திமுக செயலாளராக தளபதி முருகேசன் என்பவரை கொண்டு வந்துள்ளார் அம்மாவட்ட பொறுப்பு அமைச்சரான செந்தில் பாலாஜி. இதேபோல் கோவை வடக்கு மாவட்ட திமுக செயலாளராக தொண்டாமுத்தூர் ரவி என்பவர் அறிவிக்கப்பட்டுள்ளார்.

இந்த ரவி என்பவர் தற்போது தொண்டாமுத்தூர் ஒன்றியச் செயலாளராகவும் உள்ளார். ஆனாலும் அவருக்கு மாவட்டச் செயலாளர் பதவியும் தரப்பட்டுள்ளது. ஒன்றியம், மாவட்டம் என கட்சியில் உள்ள இரண்டு பதவிகளை ஒரே நபருக்கு வழங்கியிருப்பது தான் இப்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதில் ஏதோ குளறுபடிகள் நடந்திருக்கிறது.

திமுக தலைமைக்கழகம் வெளியிட்ட அறிவிப்பை சுட்டிக்காட்டி அது தொடர்பான விவாதங்கள் கோவை மாவட்ட திமுகவினர் மத்தியில் பேசு பொருளாக உள்ளது.

ஒரு பாணை சோற்றிற்கு ஒரு சோறு பதம் என்பார்கள். இதிலிருந்தே செந்தில் பாலாஜியின் தேர்வை புரிந்துகொள்ளுங்கள் என்கிறார்கள் கோவை உடன் பிறப்புக்கள்!

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal