தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ். ஊர்வலம், விடுதலை சிறுத்தைகள் கட்சி பேரணிக்கு திடீர் தடை விதிக்கப்பட்டிருக்கிறது.

டெல்லியை தலைமை இடமாக கொண்டு செயல்படும் பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் அலுவலகங்கள் மற்றும் நிர்வாகிகள் வீடுகளில் தேசிய புலனாய்வு முகமை மற்றும் அமலாக்கத்துறை திடீர் ஆய்வு மேற்கொண்டது.

பின்னர் சர்வதேச பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பு இருப்பதாக கூறி அந்த அமைப்புக்கு மத்திய அரசு 5 ஆண்டுகள் தடை விதித்துள்ளது. இந்த சோதனை மற்றும் தடைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் வலுத்துள்ளன.

மேலும் பாஜக மற்றும் இந்து அமைப்பு பிரமுகர்கள் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டன. இந்த நிலையில் சட்ட ஓழுங்கு பிரச்சனையை காரணம் காட்டி அரசியல் கட்சிகளின் போராட்டங்களுக்கு காவல் துறை அனுமதி மறுத்து வருகிறது. இதன் எதிரொலியால், தமிழகம் முழுவதும் 50 இடங்களில் அக்டோபர் 2-ம் தேதி ஆர்எஸ்எஸ் ஊர்வலம் நடத்த காவல்துறை அனுமதி மறுத்துள்ளது. சமூக ஒற்றுமை நல்லிணக்க மனித சங்கிலி பேரணி நடத்தப்போவதாக திருமாவளவன் அறிவித்திருந்த நிலையில், விசிகவுக்கும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

அக்டோபர் 2-ம் தேதி அன்று சட்டம்- ஒழுங்கு பிரச்னை ஏற்படும் என்பதால் ஊர்வலத்துக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அக்டோர் 2ல் வேறு சில அமைப்புகளும் தமிழகம் தழுவிய சமூக ஒற்றுமை நல்லிணக்க மனிதசங்கிலி, பேரணி நடத்த அனுமதி கோரியதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

ஆர்எஸ்எஸ் ஊர்வலத்திற்கு உயர்நீதிமன்றம் நிபந்தனையுடன் அனுமதி அளித்திருந்த நிலையில் காவல்துறை அனுமதி மறுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal