மலையாள படமான ‘சாட்டர்டே நைட்’ படத்தின் புரொமோஷன் நிகழ்ச்சிக்காக படக்குழுவினர் சமீபத்தில் கோழிக்கோட்டில் உள்ள ஷாப்பிங் மாலுக்கு சென்றிருந்தனர். அப்போது பிரபல மலையாள நடிகைகள் சானியா ஐயப்பன் மற்றும் கிரேஸ் ஆண்டனி ஆகியோருக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக படத்தின் தயாரிப்பாளர்கள் அளித்த புகாரின் பேரில் கோழிக்கோடு பாண்டிரங்கான் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். நடிகைகளில் ஒருவர் தற்போது கண்ணூரிலும் மற்றொருவர் கொச்சியிலும் உள்ளனர். அவர்களின் வாக்குமூலத்தை பதிவு செய்ய பெண் எஸ்ஐ தலைமையிலான போலீசார் சென்று உள்ளனர். தங்களுக்கு நேர்ந்த மோசமான அனுபவம் குறித்து நடிகை சானியா, தனது சமூக வலைதளப்பக்கத்தில், “நானும் எனது படக்குழுவினரும் எங்களின் புதிய திரைப்படமான ‘சாட்டர்டே நைட்’ திரைப்படத்தை கோழிகோட்டில் உள்ள ஒரு மாலில் விளம்பரப்படுத்திக் கொண்டிருந்தோம். விளம்பர நிகழ்வுகள் கோழிக்கோடு மற்றும் அனைத்து இடங்களிலும் சிறப்பாக நடந்தன.
கோழிக்கோடு மக்களின் அன்புக்கு நன்றி. மாலில் மக்கள் அதிக அளவில் இருந்ததால் கூட்டத்தைக் கையாளவும் பராமரிக்கவும் பாதுகாப்புப் படையினர் சிரமப்பட்டனர். நிகழ்ச்சிக்குப் பிறகு, நானும் என் சக நடிகர்களில் ஒருவரும் வெளியேறினோம், சிலர் என் சக நடிகையிடம் தவறாக நடந்துகொண்டார்கள். கூட்டத்தின் காரணமாக அவருக்குப் எதிர்வினையாற்ற கூட வாய்ப்பு கிடைக்கவில்லை. அதன்பிறகு, இதேபோன்ற பெண் வெறுப்பு செயலை நானும் சந்தித்தேன், நீங்கள் வீடியோவில் பார்த்தது போல் நான் அதிர்ச்சியுடன் அதற்கு பதிலளித்தேன் என பதிவிட்டுள்ளார்.