தூத்துக்குடி மாவட்ட வளர்ச்சி மற்றும் கண்காணிப்பு குழு கூட்டத்தில் கனிமொழி எம்.பி. எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்க திணறிய அதிகாரிகளால் பரபரப்பு ஏற்பட்டது.

தூத்துக்குடி மாவட்ட வளர்ச்சி மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கனிமொழி எம். பி. தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அனைத்து துறைச்சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர். இதில் 2021-2022ம் ஆண்டு மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்ட திட்டங்கள் செயல்படுத்தப்பட வேண்டிய பணிகள் குறித்து ஒவ்வொரு துறையின் சார்பிலும் நடைபெற்ற பணிகளை கனிமொழி எம்.பி. நேரடியாக அதிகாரிகளிடம் தங்களது துறைசார்ந்த பணிகளையும் நடைபெற வேண்டியவைகள் குறித்து வினா எழுப்பினார்.

அதற்கு ஒருசில அதிகாரிகள் மட்டும் பதிலுரையில் திருப்தி அடைந்த கனிமொழி பல்வேறு துறை சார்ந்த அதிகாரிகளின் பதிலுரை திருப்தி இல்லாத நிலையில் அதிகாரிகள் மத்தியில் பேசும்போது ‘‘இதுபோன்ற கூட்டத்திற்கு வரும்போது நடைபெற்ற பணிகள் நடைபெற வேண்டிய பணிகள் குறித்து முழுமையான திட்டத்தோடு கூட்டத்தில் பங்குபெற வேண்டும்’’ என்றார். இருப்பினும் பல்வேறு துறை சார்ந்த அதிகாரிகள் தங்களது துறைகளின் திட்டங்களை முழுமையாக எடுத்து வராத காரணத்தால் மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜூம் சற்று எச்சரிக்கும் வகையில் பேசினார்.

திமுக ஆட்சி பொறுப்பேற்று பதினான்கு மாதங்கள் ஆகின்றன. இதற்கு முன்பு இதுபோன்ற ஆய்வுக்கூட்டங்கள் நடைபெற்றதா இல்லையா என்ற சந்தேகம் அங்கிருந்த ஊராட்சி ஒன்றிய குழு தலைவர்களுக்கு எழுந்தது. காரணம் அரசு ஊழியர்களும் அதிகாரிகளும் கடந்த 10 ஆண்டுகளாக சுதந்திரமாக செயல்படுகிறோம் என்ற பெயரில் வளர்ச்சி பணிகளை மேற்கொண்டார்களா இல்லையா? இதுபோன்ற அரசு அதிகாரிகளும் ஊழியர்களும் செய்கின்ற தவறுகளால் தான் ஆட்சிக்கு அவப்பெயர் ஏற்படுகிறது என்று கூட்டத்தில் கலந்துகொண்ட திமுக-வை சேர்ந்த ஒருவர் கருத்து தெரிவித்தார்.

மாவட்ட வளர்ச்சிக்கு முழுமையாக பணியாற்ற வேண்டிய அதிகாரிகளே மெத்தனப் போக்கால் இன்று நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் ஒவ்வொரு துறைவாரியாக கலந்துகொண்ட அதிகாரிகள் செயல்பாடுகளை கூறும்போது குறிப்பிட்டு தனது தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் நடைபெற்ற பணிகளையும் நடைபெற இருக்கின்ற பணிகளுக்கும் விளக்கம் கேட்டார். அதற்கு கூட சரியான பதில்கள் இல்லாத நிலையே இருந்தது. இதுபோன்று தான் அனைத்து துறைகளிலும் இருக்குமோ? என்ற கேள்விக்கூட எழும்நிலை உருவானது.

மாநில மகளிர் அணிச் செயலாளரும், தூத்துக்குடி எம்.பி.யுமான கனிமொழியைப் போல், ஒவ்வொரு மக்கள் பிரதிநிதிகளும் கேள்வி எழுப்பினால்தான், மக்கள் நலப்பணிகளில் அதிகாரிகள் கவனம் செலுத்துவார்களோ..?

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal