அமைச்சர் கே.என்.நேருவின் தம்பி ராமஜெயம் கொலை வழக்கில் இருவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். வழக்கு க்ளைமாக்சை நெருங்கிவிட்டது என்கிறார்கள். இந்த வழக்கில் உண்மையான குற்றவாளிகள் இவர்கள்தானா உள்பட பல்வேறு கேள்விகள் எழுகின்றன..?

தி.மு.க. முதன்மைச் செயலாளரும், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சருமான கே.என்.நேருவின் தம்பி தொழிலதிபர் கே.என்.ராமஜெயம். தொழிலதிபரான இவர் கடந்த 2012-ம் ஆண்டு மார்ச் 29-ந்தேதி, திருச்சியில் நடைபயிற்சி சென்றபோது படுகொலை செய்யப்பட்டார். அவரது உடல் திருச்சி-கல்லணை சாலையில் திருவளர்ச்சோலை பகுதியில் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது.

தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த கொலை தொடர்பாக முதலில் திருச்சி மாநகர போலீசார் விசாரித்தனர். அதன்பின்னர், சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இதில் எவ்வித முன்னேற்றமும் ஏற்படாத நிலையில், ராமஜெயம் கொலை வழக்கை சி.பி.ஐ.யிடம் ஒப்படைக்கக்கோரி ராமஜெயம் மனைவி லதா, உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் மனுத்தாக்கல் செய்தார்.

சி.பி.ஐ.க்கு மாற்றப்பட்ட பின்னரும் கொலையில் துப்பு துலங்கவில்லை. அதைத்தொடர்ந்து ராமஜெயத்தின் சகோதரர் ரவிச்சந்திரன், இவ்வழக்கை தமிழக அரசின் சிறப்பு புலனாய்வுக்குழு மூலம் விசாரிக்க வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரை கிளையில் சமீபத்தில் வழக்கு தொடர்ந்தார். பின்னர் உயர்நீதிமன்ற உத்தரவின்படி, எஸ்.பி. ஜெயக்குமார் தலைமையில், டி.எஸ்.பி. மதன்குமார் உள்ளிட்டோர் அடங்கிய சிறப்பு புலனாய்வுக்குழு அமைக்கப்பட்டு விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், ராமஜெயம் கொலை வழக்கு குறித்து துப்பு கொடுப்பவர்களுக்கு ரூ.50 லட்சம் சன்மானம் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இவ்வழக்கில் திடீர் திருப்பமாக, சென்னையை சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ., எம்.கே.பாலன் கடத்தி கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய பிரபல ரவுடிகள் திண்டுக்கல் கணேசன், புதுக்கோட்டை செந்தில்குமார் ஆகியோரை பிடித்து சிறப்பு புலனாய்வுக் குழுவினர் விசாரித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. சென்னை சைதாப்பேட்டையில் அ.தி.மு.க. சார்பில் சட்டமன்ற உறுப்பினராக எம்.கே.பாலன் தேர்வு செய்யப்பட்டிருந்தார். ரியல் எஸ்டேட் தொழிலும் செய்து வந்தார்.

பின்னர் கட்சி தலைமையுடன் ஏற்பட்ட அதிருப்தி காரணமாக, தி.மு.க.வில் இணைந்து, தி.மு.க. தலைமைச் செயற்குழு உறுப்பினராகவும் இருந்தார். கடந்த, 2001-ம் ஆண்டு டிசம்பர் 30-ந்தேதி நடைபயிற்சி சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. அவரது மகன் மணிமாறன் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்ததன் அடிப்படையில் வழக்கு சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றப்பட்டது. பின்னர் இந்த கொலை வழக்கில் பாம் செல்வம், திண்டுக்கல் கணேசன், புதுக்கோட்டை செந்தில்குமார் உள்ளிட்ட, 18 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களிடம் நடத்திய விசாரணையில் பாலனை கடத்திச்சென்று, அடித்துக் கொன்று, எரித்து விட்டதாக தெரிய வந்தது.

இந்த கொலை வழக்கு விசாரணை தற்போது உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. சென்னையில் பாலன் நடைபயிற்சி சென்றபோது கடத்திச் சென்று கொலை செய்யப்பட்டது போலவே, திருச்சியில் ராமஜெயமும் நடைபயிற்சி சென்றபோது கடத்திச் சென்று கொலை செய்யப்பட்டிருக்கிறார். ஆகவே இந்த கொலையில் திண்டுக்கல் கணேசன், புதுக்கோட்டை செந்தில் குமார் ஆகியோருக்கு தொடர்பு ஏதேனும் உள்ளதா? என்ற கோணத்தில் திருச்சி சிறப்பு புலனாய்வு குழு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருச்சி திருவெறும்பூர் பழைய காவல்நிலையத்தில் வைத்து கடந்த, 2 நாட்களாக தீவிர விசாரணை நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. அவர்களிடம் இருந்து சில முக்கியமான விபரங்கள் சேகரிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. அதன்பின்னர் இருவரையும் விடுவித்தனர். இதில் அந்த நபர்களிடம் சிறப்பு புலனாய்வுக் குழுவினர், எப்போது அழைத்தாலும் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் எனக் கூறி அனுப்பியதாக சொல்லப்படுகிறது.

ராமஜெயம் கொலை வழக்கில் முன்னாள் எம்.எல்.ஏ. கொலை வழக்குடன் தொடர்புடைய குற்றவாளிகளிடம் விசாரணை மேற்கொண்டு இருக்கும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal