‘2024-ன் மத்திய அமைச்சரே..!’ என மு.க.அழகிரியின் மகன் துரை தயாநிதியின் பிறந்த நாளைக்கு, அவரது ஆதரவாளர்கள் மதுரையை சுற்றி ஒட்டியுள்ள போஸ்டரில் இந்த வாசகம் இடம் பெற்றிருக்கிறது. இதுதான் தற்போது தி.மு.க.வில் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

மத்திய அமைச்சராகவும் திமுகவின் தென் மண்டல அமைப்புச் செயலாளராகவும் இருந்தார் மு.க. அழகிரி. 2014-ம் ஆண்டு அவரது தந்தை மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியால் திமுகவில் இருந்து நீக்கப்பட்டார்.

இதன்பின்னர் கருணாநிதி உயிரோடு இருந்த காலத்திலும் அவரது மறைவுக்குப் பின்னரும் மு.க.அழகிரி திமுகவில் சேருவதற்கான சில முயற்சிகளை மேற்கொண்டார். ஆனால் திமுகவில் அழகிரி சேர்த்துக் கொள்ளப்படவில்லை. கடந்த ஆண்டு சட்டசபை தேர்தலின் போது அழகிரி தனிக் கட்சி தொடங்குவார் எனவும் கூறப்பட்டது. ஆனால் அழகிரி மவுனமாக இருந்துவிட்டார்.

பின்னர் சட்டசபை தேர்தலில் திமுக வென்று 10 ஆண்டுகளுக்குப் பின் ஆட்சியை கைப்பற்றியது. அது முதல் திமுக தலைமையுடன் இணக்கமாக போக்கில்தான் மு.க. அழகிரி குடும்பம் இருந்து வருகிறது. அதேநேரத்தில் மதுரைக்கு அடிக்கடி செல்லும் முதல்வர் ஸ்டாலின், அழகிரியை சந்திக்கவில்லை. இருவரது சந்திப்பு தொடர்பாக பல்வேறு யூகங்கள் வெளியான போதும் அதுபோல் எதுவும் நடைபெறவில்லை. முதல்வர் ஸ்டாலினும் அழகிரியும் குடும்ப நிகழ்ச்சிகளில் கூட நேரடியாக சந்தித்து பேசாமல் தவிர்த்தும் வருகின்றனர்.

இந்நிலையில் மு.க.அழகிரி மகன் துரை தயாநிதி பிறந்த நாளை அவரது ஆதரவாளர்கள் அமர்க்களமாக இன்று கொண்டாடி வருகின்றனர். துரை தயாநிதியின் பிறந்த நாளை முன்னிட்டு வழக்கம் போல மதுரை மாநகரமெங்கும் சுவரொட்டிகளால் அதகளப்படுத்திவிட்டனர் ஆதரவாளர்கள். அதில் இடம்பெற்றுள்ள வாசகங்கள் பெரும் சர்ச்சையைக் கிளப்பியிருக்கின்றன!

அந்த சுவரொட்டிகளில் ஒன்றில், 2024-ல் மத்திய அமைச்சரே! என துரை தயாநிதிக்கு பட்டம் கொடுக்கப்பட்டுள்ளது. இதனை முன்வைத்து திமுகவினர் தீவிர விவாதங்களை நடத்தி வருகின்றனர். 2024 லோக்சபா தேர்தலுக்கு முன்னர், அழகிரி திமுகவில் மீண்டும் சேர்க்கப்படலாம்; அவரது மகனுக்கு ஒரு தொகுதி வழங்கப்படலாம் என பேசி முடித்துவிட்டார்களோ என்னவோ என்கிற கிசுகிசுப்பும் நம் காதில் வந்து விழுந்தன.

ஏற்கனவே, தி.மு.க.வின் துணைப் பொதுச் செயலாளர் பதவி கனிமொழிக்கு கொடுக்கலாமா வேண்டாமா… என ஸ்டாலின் யோசித்து வரும் நிலையில், அழகிரியின் மகனுக்கு எம்.பி. சீட்டா… என எதிர் கேள்வி கேட்கிறார்கள் விபரமறிந்தவர்கள்!

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal