பி.ஜே.பி. நிர்வாகிகள் மற்றும் அவரது சொத்துக்கள் மீது தொடர் தாக்குதல் நடத்தி வந்த நிலையில், நேற்று நள்ளிரவு சின்னாமனூர் பா.ஜ.க. நிர்வாகியின் காரை சேதப்படுத்தியிருக்கிறார்கள்!

தேனி மாவட்டம் சின்னமனூரைச் சேர்ந்தவர் பிரபாகரன். இவர் பாரதிய ஜனதா கட்சியின் உள்ளாட்சி மேம்பாட்டு பிரிவு மாநில செயலாளராக உள்ளார். மேலும் அதே பகுதியில் தனியார் பள்ளி ஒன்றையும் நடத்தி வருகிறார்.

சின்னமனூர்-தேனி சாலையில் உள்ள இந்த பள்ளியில் புதிய கட்டுமானப்பணிகள் நடந்து வருகிறது. இந்த இடத்தில் அந்த காரை நிறுத்தி விட்டு பிரபாகரன் சென்னைக்கு சென்றிருந்தார். இன்று காலை தனது பள்ளிக்கு வந்தபோது அவரது கார் கண்ணாடி உடைக்கப்பட்டு இருந்தது. இதை பார்த்ததும் அதிர்ச்சியடைந்த பிரபாகரன் சின்னமனூர் போலீசில் புகார் அளித்தார். சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

நேற்று நள்ளிரவில் மர்ம நபர்கள் இப்பகுதியில் சுற்றி வந்ததாகவும் அவர்கள் இந்த சம்பவத்தில் ஈடுபட்டு இருக்கலாம் என்றும் போலீசார் சந்தேகமடைந்துள்ளனர். மாவட்ட எஸ்.பி. பிரவீன் உமேஷ் டோங்கரே நேரில் வந்து ஆய்வு மேற்கொண்டார். மேலும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இச்சம்பவம் குறித்து அறிந்ததும் ஏராளமான பா.ஜ.க. நிர்வாகிகள் அங்கு திரண்டனர்.

போலீசார் அவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தினர். இந்த சம்பவத்தால் சின்னமனூரில் பரபரப்பான சூழல் ஏற்பட்டுள்ளது.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal