கடுமையான போட்டிகளுக்கு இடையே சுப்புலட்சுமி ஜெகதீசன் வகித்து வந்த திமுக துணைப் பொதுச் செயலாளர் பதவி திமுக எம்பி கனிமொழிக்கு கொடுக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த சட்டமன்றத் தேர்தலில் மொடக்குறிச்சி சட்டமன்றத்தில் போட்டியிட்டு பாஜக வேட்பாளர் சரஸ்வதியிடம் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் சுப்புலட்சுமி ஜெகதீசன் ‘திட்டமிட்டு’ தோற்கடிக்கப்பட்டார். தேர்தல் தோல்விக்கு ஈரோடு மாவட்ட முக்கிய புள்ளி மற்றும் திமுக நிர்வாகிகள் செய்த சதி செயலே காரணம். இது தொடர்பாக, மாவட்ட முக்கிய புள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதல்வர் ஸ்டாலினிடம் சுப்புலட்சுமி ஜெகதீசன் புகார் அளித்தார். ஆனால், இந்த புகாரை மு.க.ஸ்டாலின் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை.

அதேபோல், தனக்கு மாநிலங்களவை உறுப்பினர் பதவியை திமுக தலைமை தரும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஏமாற்றமே மிஞ்சியது. சமீபத்தில் நடந்த உட்கட்சி தேர்தலில், சுப்புலட்சுமி ஆதரவாளர்கள் புறக்கணிக்கப்பட்டனர். தொடர் புறக்கணிப்பால் சுப்புலட்சுமி ஜெகதீசன் கடும் அதிருப்தியில் இருந்து வந்தார். கடந்த சில நாட்களுக்கு முன் நடந்த முப்பெரும் விழாவிலும் அவர் கலந்து கொள்ளாமல் புறக்கணித்தார்.

இந்நிலையில், சுப்புலட்சுமி கணவர் ஜெகதீசன் முகநூலில் சில நாட்களுக்கு முன் திமுகவை கடுமையாக விமர்சனம் செய்திருந்தார். இதற்கு சுப்புலட்சுமி எந்த ஒரு எதிர்ப்பும் தெரிவிக்காமல் இருந்தது திமுக தலைமையை அதிர்ச்சியடைய செய்தது. இந்நிலையில், திமுகவின் துணை செயலாளர் பதவியில் இருந்து விலகுவதாக சுப்புலட்சுமி ஜெகதீசன் கடந்த 20ம் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.

இந்நிலையில், சுப்புலட்சுமி ஜெகதீசன் வகித்து வந்த துணை பொதுச்செயலாளர் பதவி அடுத்து யாருக்கு கிடைக்கப் போகிறது என்ற எதிர்பார்ப்பு திமுகவினர் மத்தியில் எழுந்துள்ளது. இதில், தூத்துக்குடி எம்.பி.கனிமொழி, சமூகநலத்துறை அமைச்சர் கீதா ஜீவன், திமுகவின் கொள்கை பரப்பு இணைச்செயலாளருமான புதுக்கோட்டை விஜயா, பூங்கோதை ஆலடி அருணா, டாக்டர் கனிமொழி சோமு உள்ளிட்டவரின் பெயர்கள் அடிப்பட்டன!

இந்நிலையில், திமுக எம்.பி. கனிமொழிக்கு கொடுக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுதொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது, எந்தவொரு பணியாக இருக்கட்டும், பதவியாக இருக்கட்டும் கனிமொழி தானாக கேட்டுப் பெறமாட்டார். அவருக்கு ஒதுக்கப்பட்ட பணியை செம்மையாக செய்து முடிப்பார். சங்கமம் நிகழ்ச்சியை மிகவும் திறம்பட வெளியுலகிற்கு வெளிச்சம் போட்டுக் காட்டினார்.

ஏற்கனவே, அவர் வகித்து வரும் மகளிர் அணிச் செயலாளர் பதவியும் அவர்வசமே இருக்கும் என்கிறார்கள்!

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal