அதிமுக அலுவலக கலவரத்தின்போது திருடப்பட்டதாக சொல்லப்பட்ட அனைத்து ஆவணங்களும் ஓபிஎஸ் தரப்பிடம் இருந்து மீட்கப்பட்டு நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டதாக சிபிசிஐடி தெரிவித்துள்ளது.
கடந்த ஜூலை 11 ஆம் தேதி நடந்த அதிமுக பொதுக் குழு கூட்டத்தில் இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி அறிவிக்கப்பட்டார். அந்த நேரத்தில் ஓபிஎஸ் தனது ஆதரவாளர்களுடன் ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்திற்கு சென்றார். அங்கு எடப்பாடி தரப்பினருக்கும் ஓ பன்னீர் செல்வம் தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.
இதையடுத்து பூட்டியிருந்த அலுவலகத்தின் கேட்டை உடைத்துக் கொண்டு ஓபிஎஸ் தனது ஆதரவாளர்களுடன் உள்ளே சென்றார். அப்போதும் இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் இரு தரப்பினருக்கும் காயம் ஏற்பட்டது. இது தொடர்பாக ஓபிஎஸ் தரப்பினர் மீது எடப்பாடி பழனிசாமி தரப்பினர் போலீஸில் புகார் அளித்தனர்.
மேலும் ஜெயலலிதா அறையிலிருந்த வெள்ளி வேல் உள்ளிட்ட பரிசு பொருட்களையும் முக்கிய ஆவணங்களையும் திருடி சென்றுவிட்டதாக ஓபிஎஸ் தரப்பினர் மீது எடப்பாடி பழனிசாமி தரப்பு புகார் அளித்தது. அதன் பேரில் ஓபிஎஸ் உள்பட 60 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த நிலையில் தகவலறிந்த வருவாய் துறையினர் அதிமுக அலுவலகத்திற்கு சீல் வைத்தனர்.
இந்த வழக்கு தொடர்பாக சிபிசிஐடி போலீஸ் விசாரணை நடத்தி வருகிறது. அதில் அதிமுக அலுவலகத்தில் ஆய்வு செய்ததில் திருடப்பட்டதாக சொல்லப்பட்ட வெள்ளி வேல் அந்த இடத்திலேயே இருக்கிறது என சிபிசிஐடி போலீஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும் தற்போது மீண்டும் சிபிசிஐடி போலீஸார் தரப்பில், ‘‘ அதிமுக அலுவலக கலவரத்தின் போது திருடப்பட்ட அனைத்தும் ஆவணங்கள் ஓபிஎஸ் தரப்பிடம் இருந்து மீட்கப்பட்டு அவை நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது’’ என சிபிசிஐடி தெரிவித்துள்ளது.