திமுகவில் கலைஞர் கருணாநிதி ஆட்சி அமைந்த போதெல்லாம் அவரது அமைச்சரவையில் ராமநாதபுரம் கோண்டாவில் சுப. தங்கவேலனுக்கு அங்கீகாரம் கொடுத்து வந்தனர். வயதை காரணம் காட்டி திமுகவில் கடந்த 5 ஆண்டுகளாக சுப . தங்கவேலனை ஓரம் கட்டிய போது தனது மகன் திவாகரனை தனது இடத்திற்கு கொண்டு வர எவ்வளவோ முயற்சி செய்தும் முடியவில்லை.
அதன் பின்னர் ராமநாதபுரம் மாவட்ட திமுக காதர் பாட்சா (எ) முத்துராமலிங்கம் வசம் போனதில் இருந்து அப்பா மகன் இருவரையும் முழுமையாக ஓரம் கட்டினர். கடந்த சட்டமன்றத் தேர்தலில் ராஜகண்ணப்பனுக்கு முதுகுளத்தூர் தொகுதியில் போட்டியிட சீட் கொடுத்ததும் அவரது தொகுதியில் சுப தங்கவேலன் மற்றும் அவரது மகன் திவாகரன் தீவிரமாக தேர்தல் வேலை பார்த்ததும், தனக்கு கிடைக்க வேண்டிய அமைச்சர் பதவி ராஜ கண்ணப்பனுக்கு போனதில் இருந்து காதர் பாட்சா( எ) முத்துராமலிங்கம் தரப்பு சுப. தங்கவேலன் மீது ஏககடுப்பில் இருந்து வருகின்றனர்.
ராமநாதபுரம் மாவட்ட திமுகவில் தனக்கான அங்கீகாரம் குறைந்து வருவதை அறிந்த காதர் பாட்சா தரப்பு ராஜ கண்ணப்பனை டம்மியாக்க சமயம் பார்த்து கொண்டிருந்தனர். அந்த நேரத்தில் அரசு அதிகாரியை சாதியை சொல்லி திட்டிய விவகாரத்தில் ராஜகண்ணப்பனுக்கு அமைச்சர் இலாகா மாற்றத்தோடு, திருநெல்வேலி மாவட்ட பொறுப்பாளராக தூக்கியடித்தனர்.
ராமநாதபுரம் மாவட்ட திமுகவில் தனி சாம்ராஜ்யம் காதர் பாட்சா முத்துராமலிங்கம் நடத்தி வருவதால் தனக்கான அங்கீகாரத்தை தலைமை மூலம் பெறலாம் என சுப தங்கவேலன் சென்னைக்கும், ராமநாதபுரத்துக்கும் போய் வந்தாலும் திமுக தலைமை கண்டுகொள்ளவே இல்லையாம்.
தற்போது திமுகவில் உட்கட்சி தேர்தல் நடைந்து வருவதால் தனது மகன் திவாகரனை மாவட்ட செயலாளர் பதவிக்கு போட்டியிட வைத்து விடலாம் என அறிவாலயம் சென்ற சுப தங்கவேலனுக்கு விண்ணப்ப படிவம் கொடுக்காததோடு அங்கிருந்த மூத்த அமைச்சர் ஒருவர் இனிமே உங்க படமெல்லாம் திமுகவில் எடுபடாது, இனிமே கட்சி பதவி கேட்டு அறிவாலயம் பக்கம் வந்துடாதீங்கனு விரட்டி அடித்ததாக தகவல் கசிகின்றன.
இதனால் செய்வதறியாது இருந்த முன்னாள் அமைச்சர் சுப தங்கவேலனிடம் அவரது மகன் திவாகரன் ‘இனிமேல் திமுகவில் இருந்து அசிங்கப்பட வேண்டாம் கட்சியை விட்டு வெளியேறுவோம்னு’ காச்சுமூச்சுனு கத்தியிருக்கிறார். அத்தோடு இருக்காமல் அதிமுக பக்கம் போய் விடலாமெனவும் பேசி இருக்கிறார்.
இதற்கு முன்னாள் அமைச்சர் சுப தங்கவேலன் அதிமுகவில் இப்ப இருக்கிற குழப்பமான சூழ்நிலையில் அங்கு போனா சரியா இருக்குமானு கேட்டதோடு, ஒரு நாள் வெயிட் பண்ணு யோசிச்சு சொல்வதாக திவாகரனை அனுப்பி வைத்திருக்கிறார். மறுநாள் காலை வந்த திவாகரனிடம் அதிமுக போகலாம் என்ற விஷயத்தை சொல்லியதோடு அதிமுகவில் சேர ராமநாதபுரம் மாவட்ட அதிமுகவினரை தவிர்த்து சென்னையில் இருக்கும் முன்னாள் அமைச்சர் ஒருவரிடம் விஷயத்தை சொல்லி இருக்கிறார்கள். அவரும் எடப்பாடியிடம் தகவல் தெரிவிக்க, அதற்கான முதல் கட்ட பேச்சுவார்த்தை ஞாயிற்றுக்கிழமை நடந்து முடிந்தவிட்டது என்கிறார்கள்.
முன்னாள் அமைச்சர் சுப தங்கவேலன் மற்றும் அவரது மகன் திவாகரன் அதிமுகவில் சேரும் சேதி இன்னும் ஓரிரு நாட்களில் உறுதியாகும் எனவும் தகவல் தெரிவிக்கின்றனர்.