தி.மு.க. மாவட்டச் செயலாளர் தேர்தலுக்கான வேட்பு மனு இன்றுடன் நிறைவடைகிறது. மற்ற மாவட்டங்களில் போட்டி வேட்பாளர்கள்… கோஷ்டி மோதல் என இருக்க… கோவையில் சி.எம்.மின் சிக்னலோடு கனக்கச்சிதமாக வேலையை முடித்திருக்கிறார் செந்தில் பாலாஜி. இதனால், அ.தி.மு.க. அதிர்ச்சியில் இருக்கிறது.

கோவை மாநகர் மாவட்டத்திற்கு கார்த்திக்கும், கோவை தெற்கு மாவட்டத்திற்கு தளபதி முருகேசனும், கோவை வடக்கு மாவட்டத்திற்கு ரவியும் மாவட்ட செயலாளர்களாக வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். மற்றவர்கள் இதுவரை வேட்புமனு தாக்கல் எதுவும் செய்யவில்லை.

இவர்கள் மூன்று பேருமே செந்தில் பாலாஜியின் ஆதரவாளர்கள். ஸ்டாலினிடம் இருந்து சிக்னல் வந்த பின்பே இவர்கள் வேட்புமனு தாக்கல் செய்ததாக கூறப்படுகிறது. கோவை மாவட்டத்தில், திமுகவுக்கு அமைப்பு ரீதியாக, கோவை வடக்கு-தெற்கு-கிழக்கு என 3 மாவட்டங்களும், கோவை மாநகர் மேற்கு-கிழக்கு என 2 மாவட்டங்களும் என 5 மாவட்ட செயலாளர்கள் திமுகவில் இருந்தனர். 5 மாவட்டங்களாக இருந்தது மூன்றாக பிரிக்கப்பட்டு கோவை தெற்கு, வடக்கு, மாநகரம் என்று அமைக்கப்பட்டது.

கோவையில் இந்த மாற்றத்தை செய்ய வேண்டும் என்பது முதல்வர் ஸ்டாலின் மற்றும் செந்தில் பாலாஜியின் கூட்டு திட்டம் என்று கூறப்படுகிறது. 5 மாவட்டங்கள் இருப்பதால் மோதல்தான் இருக்கிறதே ஒழிய வேலை நடப்பது இல்லை. 3 ஆக மாற்றலாம் என்று கூட்டாக இவர்கள் முடிவு செய்துள்ளனர். அதன்படியே இந்த மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. அதோடு இப்போது மாவட்ட செயலாளர்களுக்கான வேட்புமனுவும் தாக்கல் செய்யப்பட்டுவிட்டது.

இந்த தேர்தலில் தற்போது செந்தில் பாலாஜியின் கை ஓங்கி இருப்பதால் அதிமுக அப்செட்டில் இருக்கிறதாம். ஏற்கனவே கொங்கு மண்டலத்தில் திமுக சார்பாக செந்தில் பாலாஜிதான் வலுவாக இருக்கிறார். கடந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் செந்தில் பாலாஜி மூலம்தான் கோவையை திமுக ஸ்வீப் செய்தது. ஆனால் அப்போது திமுகவிலேயே சிலர் செந்தில் பாலாஜிக்கு எதிராக வேலை பார்த்ததாக கூறப்பட்டது. கோவையை சேர்ந்த சிலர் செந்தில் பாலாஜி வெளியூர்காரர் என்பதால் அவருக்கு எதிராக வேலை பார்த்ததாக கூறப்பட்டது.

ஆனால் அப்போதே செந்தில் பாலாஜி கரூரில் இருந்து ஆட்டக்காரர்களை இறக்கி தேர்தல் வேலைகளை பார்த்தார். இதன் மூலம் அதிமுகவை காலி செய்து திமுக மாபெரும் வெற்றியை பெற்றது. ஆனால் இந்த முறை மொத்தமாக கோயம்புத்தூர் செந்தில் பாலாஜி வசம் செல்லும் அறிகுறிகள் தெரிந்துள்ளன. மூன்று மாவட்ட செயலாளர்களுக்கான வேட்பாளர்களும் செந்தில் பாலாஜியின் ஆதரவாளர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. கோவை அவரின் கட்டுப்பாட்டில் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன.

இது போக 5 அமைப்பு ரீதியான கோவை மாவட்டங்களில் 2 நீக்கப்பட்டு 3 மாவட்டங்களாக குறைக்கப்பட்டு இருக்கிறது. இதுவும் அதிமுகவை அதிர வைத்துள்ளது. இதன் மூலம் உட்கட்சி பூசல் இன்று திமுக எளிதாக வேலை பார்க்க முடியும் என்றும் கூறப்படுகிறது. அவர் கோவையை மொத்தமாக பிடித்துவிட்டார்.. இங்கே எங்கள் ஆட்களால் காசையே வெளியே எடுக்க முடியவில்லை. இனி கஷ்டம்தான் என்று செந்தில் பாலாஜியின் எழுச்சியை அதிமுகவினரே புலம்பலாக தெரிவித்து வருகின்றனர்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal