சென்னை விருகம்பாக்கத்தில், மதுபோதையில் தகராறில் ஈடுபட்ட கள்ளக்காதலனை, மற்றொரு கள்ளக்காதலனுடன் சேர்ந்து குத்திக்கொன்ற பெண் உட்பட இருவரை, போலீசார் கைது செய்தனர்.

விருகம்பாக்கம், சாரதாம்பாள் தெருவைச் சேர்ந்தவர் சவுந்தர்யா, 29; மாநகராட்சி ஒப்பந்த தூய்மை பணியாளர். இவர், கணவரை பிரிந்து 14 மற்றும் 12 வயதுடைய இரு மகன்களுடன் வசித்து வருகிறார். இவருக்கும் நெற்குன்றம், மேட்டுக்குப்பத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளியான விஜய், 27, என்பவருக்கு கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது. விஜய் சவுந்தர்யாவின் வீட்டில் வசித்து வந்துள்ளார்.

இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு, விஜயை மர்ம நபர்கள் குத்திக் கொலை செய்ததாகக் கூறி, சவுந்தர்யாவின் மகன்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.சம்பவ இடத்திற்கு வந்த விருகம்பாக்கம் போலீசார், விஜய் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின், இதுகுறித்து வீட்டில் இருந்த சிறுவர்களிடம் விசாரித்தனர். இதில், வழக்கம் போல் தாய் சவுந்தர்யா பணிக்குச் சென்றதும், குடிபோதையில் இருந்த விஜய் தங்களை கடைக்கு அனுப்பியதாகவும், திரும்பி வந்து பார்த்த போது, விஜய் இறந்து கிடந்ததாகவும் முதலில் தெரிவித்தனர்.

பின், ‘தங்களை தகாத வார்த்தைகளால் பேசி, வெளியே விளையாட விடாமல் தடுத்து தொல்லை கொடுத்ததால், விஜயை கொலை செய்தோம்’ என்றும், முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தனர்.இதையடுத்து, வேலைக்கு சென்றிருந்த சவுந்தர்யாவை காவல் நிலையம் அழைத்து வந்து போலீசார் விசாரித்தனர்.அப்போது, விஜயை தன் கள்ளக்காதலன் பிரபு என்பவருடன் சேர்ந்து கத்தியால் குத்திக் கொலை செய்ததை, அவர் ஒப்புக் கொண்டார்.இதையடுத்து, சவுந்தர்யா மற்றும் பிரபுவை போலீசார் கைது செய்ததுடன், கத்தியையும் பறிமுதல் செய்தனர்.

இது குறித்து போலீசார் தரப்பில் கூறும்போது, ‘‘கணவரை பிரிந்து வாழ்ந்து வந்த சவுந்தர்யாவிற்கும் விஜய்க்கும் பழக்கம் ஏற்பட்டு, கள்ளக்காதலாக மாறிய நிலையில், இருவரும் ஒரே வீட்டில் வசித்து வந்தனர்.விஜய் தினமும் குடிபோதையில் வீட்டிற்கு வந்து, சவுந்தர்யாவை அடித்து துன்புறுத்தி, தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார்.

இந்நிலையில், தன்னுடன் பணிபுரிந்த கோடம்பாக்கத்தைச் சேர்ந்த பிரபு, 36, என்பவருடன், சவுந்தர்யாவுக்கு பழக்கம் ஏற்பட்டு, கள்ளக்காதலாக மாறியுள்ளது.விஜய் வீட்டில் இருக்கும் போது, இரவு நேரங்களில் பிரபுவையும் சவுந்தர்யா வீட்டிற்கு வரவழைத்துள்ளார். பலமுறை எச்சரித்தும், சவுந்தர்யா பிரபுவுடனான உறவை துண்டிக்காமல், இருவரும் ஒன்றாக சுற்றி வந்துள்ளனர்.

இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு, சவுந்தர்யாவை பார்க்க, அவரது வீட்டிற்கு பிரபு சென்றுள்ளார். அங்கு மது போதையில் இருந்த விஜயுடன் வாக்குவாதம் ஏற்பட்டு உள்ளது. ஆத்திரமடைந்த பிரபு மற்றும் சவுந்தர்யா ஆகியோர், கத்தியால் விஜயை குத்திக் கொலை செய்து, சவுந்தர்யாவின் மகன்களிடம் நாடக அரங்கேற்றத்தைப் பற்றி கூறிவிட்டு, வழக்கம் போல் பணிக்கு சென்றுள்ளனர்’’ இவ்வாறு போலீசார் தெரிவித்தனர்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal