மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு, தனக்கு பிறக்க வில்லை எனக்கூறி பெற்ற மகளை தந்தை கொன்ற சம்பவம்தான் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

மதுரை ஜெய்ஹிந்துபுரம் வ.உ.சி. தெருவை சேர்ந்தவர் காளிமுத்து (வயது 42), டெய்லர். இவரது மனைவி பிரியதர்ஷினி. இவர்களுக்கு தன்ஷிகா (8) என்ற மகள் இருந்தாள். அவள் அந்த பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 4-ம் வகுப்பு படித்து வந்தாள்.

இந்த நிலையில் காளிமுத்து டெய்லரிங் கடைக்கு சென்று வந்தார். அவரது மனைவி பிரியதர்ஷினி ஒரு தனியார் நிறுவனத்தில் விற்பனையாளராக வேலை பார்த்து வருகிறார். இவர் காலையில் வேலைக்கு சென்றால் இரவில்தான் வீடு திரும்புவார். இந்த நிலையில் காளிமுத்துவுக்கு மனைவியின் நடத்தை மீது சந்தேகம் இருந்து வந்தது. இதனால் தனது மகள் தன்ஷிகா தனக்கு பிறக்கவில்லை என்று கூறி அடிக்கடி தகராறு செய்து வந்ததாக கூறப்படுகிறது.

கடந்த 3-ந்தேதி காளிமுத்து சிவகங்கையில் உள்ள தனது அக்காள் வீட்டுக்கு தன்ஷிகாவை அழைத்து சென்றார். அதன் பின்னர் அவர் வீட்டிற்கு மகளை அழைத்து வரவில்லை. இதற்கிடையே பிரியதர்ஷினி தனியாக இருந்ததால் கடந்த சில நாட்களுக்கு முன்பு மேலூரில் உள்ள தனது அக்காள் வீட்டில் தங்கி இருந்தார். அங்கு காளிமுத்து வந்து மனைவியுடன் ஒரு சில நாட்கள் இருந்துள்ளார். அவரிடம் மகள் எங்கே? என்று பிரியதர்ஷினி கேட்டபோது, அவள் சிவகங்கையில் உள்ள எனது அக்காள் வீட்டில் பத்திரமாக இருக்கிறாள். அவளை பற்றி கவலைப்பட வேண்டாம் என்று கூறி வந்தார்.

ஆனால் காளிமுத்து தனது மகளை அக்காள் வீட்டில் இருந்து அழைத்து வந்து ஜெய்ஹிந்துபுரத்தில் உள்ள வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார். மனைவியின் மீது உள்ள கோபத்தில் மகள் தன்ஷிகா கழுத்தை நெரித்து கொலை செய்து அவளது உடலை ஒரு பிளாஸ்டிக் வாளியில் வைத்து அடைத்து சாக்கில் வைத்து கட்டி வீட்டில் தேவையில்லாத பொருட்கள் வைத்திருக்கும் பரணில் மறைத்து வைத்துள்ளார். இதுபற்றி தெரியாததால் தன்ஷிகாவின் தாய் பிரியதர்ஷினி மகள் பிணம் வீட்டில் இருப்பது தெரியாமல் அங்கேயே சில நாட்கள் தங்கியிருந்துள்ளார்.

சமீபத்தில் அவர் மேலூரில் உள்ள அக்காள் வீட்டில் தங்கி இருந்து விட்டு மீண்டும் தனது வீட்டு வந்துள்ளார். அவருடன் கணவர் காளிமுத்துவும் வந்துள்ளார். மாட்டுத்தாவணி வந்ததும் காளிமுத்து சிவகங்கையில் உள்ள தனது அக்காள் வீட்டிற்கு செல்வதாக கூறி விட்டு சென்று விட்டார். ஜெய்ஹிந்துபுரத்தில் உள்ள வீட்டிற்கு பிரியதர்ஷினி வந்தபோது அவருக்கு அதிர்ச்சி தகவல் காத்திருந்தது. அந்த பகுதியில் வசிப்பவர்கள் உங்கள் வீட்டில் இருந்து துர்நாற்றம் வருகிறது. ஏன் என்று பாருங்கள் என்று கூறி உள்ளனர்.

இதைத்தொடர்ந்து பிரியதர்ஷினி எங்கிருந்து துர்நாற்றம் வருகிறது என்று வீடு முழுவதும் தேடி பார்த்தபோது, பரணில் இருந்த ஒரு சாக்குமூட்டையில் இருந்து துர்நாற்றம் வருவது தெரியவந்தது. அந்த சாக்குமூட்டையை எடுத்து பார்த்தபோது ஒரு பிளாஸ்டிக் வாளி மூடப்பட்டு இருந்த நிலையில் இருந்தது. அந்த ஒரு பகுதியை எலி கடித்து துளையிட்டு இருந்தது.

அந்த வாளியை திறந்து பார்த்தார். அப்போது தனது மகள் தன்ஷிகா கைகால்கள் கட்டப்பட்ட நிலையில், உடல் அழுகி பிணமாக இருப்பது கண்டு பிரியதர்ஷினி அதிர்ச்சி அடைந்தார். இது எப்படி நடந்தது என்பது அறியாமல் அவரது இதயம் ஒரு நிமிடம் நின்றுவிட்டது. அதன் பின்னர் கணவர்தான் இந்த செயலை செய்திருக்க வேண்டும் என்று கருதிய அவர், இதுபற்றி ஜெய்ஹிந்துபுரம் போலீசில் புகார் செய்தார்.

அதன்பேரில் போலீசார் சிறுமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த பரிசோதனையில் அவர் பலாத்காரம் செய்யப்படவில்லை. கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டுள்ளார் என்று தெரியவந்துள்ளது.

இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான சிறுமியின் தந்தை காளிமுத்துவை தேடி வருகின்றனர்.

இந்த கொடூர சம்பவம் மதுரை மாநகர மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. காளிமுத்து கைது செய்யப்பட்டால் மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் தெரியவரும்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal