பெட்ரோல் குண்டு வீசும் நபர்கள் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுவார்கள் என போலீஸ் டிஜிபி சைலேந்திர பாபு எச்சரித்துள்ளார்.
தமிழகத்தில் கோவை, திருப்பூர், மதுரை, சேலம், கன்னியாகுமரி உள்ளிட்ட இடங்களில் பா.ஜ., மற்றும் ஆர்எஸ்எஸ் பிரமுகர் வீடுகளில் பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டன. இதனால், கோவை மாவட்டத்தில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. அங்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், சைலேந்திரபாபு வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:
‘‘பெட்ரோல் குண்டு வீசும் நபர்கள், பொது அமைதிக்கு குந்தகம் விளைவிப்போர், குற்றச்செயலில் ஈடுபடுவோர் , தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுவார்கள். குற்றச்செயலில் ஈடுபடுவோர்களை பிடிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை நடக்கிறது. இதுவரை 250 பேரிடம் விசாரணை நடக்கிறது.
கோவையில் கூடுதலாக 3,500 போலீசார் பதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். சில அமைப்பை சேர்ந்தோர், வீடு, கார் மீது கல்வீசியது தொடர்பாக 19 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்’’ இவ்வாறு அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.