தி.மு.க. ஆட்சியில் சாலையோரத்தில் தட்டில் வைத்து பூ விற்பவர்களிடம் கூட மாமுல் கேட்க ஆரம்பித்துவிட்டார்கள். இதனை பார்த்துக் கொண்டு சும்மா இருக்க மாட்டேன் என சசிகலா எச்சரிக்கை விடுத்திருக்கிறார்!

சசிகலா கும்மிடிப்பூண்டி தொகுதியில் பயணம் மேற்கொண்டுடார். அப்போது அவர் மக்களிடையே சசிகலா பேசியதாவது:-

‘‘தி.மு.க.விடம் ஒன்றை மட்டும் கேட்கிறேன். கடந்த 2 வருடங்களாக கொரோனா பாதிப்பால் மக்கள் எந்த வேலையும் செய்ய முடியவில்லை. எல்லோரும் வீட்டில் முடங்கி கிடந்தார்கள். எந்த தொழிலும் நடை பெறவில்லை. இந்த நிலையில் வீட்டு வரி, கடை வரிகளை தி.மு.க. அரசு அதிகப்படுத்தி இருக்கிறார்கள். கடை வியாபாரிக்கும் சரியான வியாபாரம் இல்லாமல் கஷ்டப்படுகிறார்கள். அவர்கள் எப்படி அரசுக்கு பணம் கட்ட முடியும்? ஆனால் தி.மு.க. அரசு அதனை எல்லாம் ஒரு போதும் எண்ணிப்பார்க்க வில்லை. பதவிக்கு வந்து விட்டோம் 5 வருடம் நம்மை யாரும் எதையும் செய்ய முடியாது. அதனால் நாம் செய்ய வேண்டியதை செய்வோம் என்ற எண்ணத்தில் செய்கிறார்கள்.

தமிழக மக்கள் தான் இதற்கெல்லாம் ஒரு முடிவு கட்ட வேண்டும். தமிழக மக்களுக்காக தான் நான் இங்கே பேசிக் கொண்டு இருக்கிறேன். தி.மு.க.வின் கூட்டணியில் இப்போது தமிழ் நாட்டின் பெரும்பாலான கட்சிகள் இருக்கிறது. அதனால் அந்த கட்சிகள் எல்லாம் எதிர்த்து குரல் கொடுப்பதில்லை. நாம் தான் தி.மு.க. ஆட்சிக்கு எதிராக குரல் கொடுக்கிறோம். நாம் தான் ஆட்சியாளர்களுக்கு எடுத்துரைக்க வேண்டும். தனிப்பட்ட முறையில் எனக்காக எதையும் கேட்க வில்லை. தமிழக மக்கள் மீது சுமத்தப்பட்டுள்ள வரியை தான் கேட்கிறேன். தமிழக மக்கள் மீது வரியை சுமத்தாதீர்கள். அதனை தி.மு.க. அரசு குறைக்க வேண்டும். உடனடியாக செய்ய வேண்டும் என்பது தான் கேள்வியாக தொடுத்துக் கொண்டிருக்கிறேன்.

இதேபோன்று முதியோர் உதவித்தொகையையும் தி.மு.க. அரசு சரிவர தருவதில்லை. ஏழை-எளியவர்களுக்காகவும், வேலைக்கு செல்பவர்கள் பசியாற சாப்பிட வேண்டும் என்பதற்காகத்தான் அம்மா உணவகத்தை கொண்டு வந்தார்கள். அதனையும் தி.மு.க. ஆட்சியாளர்கள் ஒவ்வொன்றாக மூடி வருகிறார்கள். காழ்ப்புணர்ச்சி காரணமாக ஏதோ ஒரு வகையில் முடக்க பார்க்கிறார்கள். அதேபோன்று பெரிய பெரிய கோவில்களுக்கு வேண்டுதலுக்காக பக்தர்கள் சென்றால் அங்கு அன்னதான திட்டத்தை கொண்டு வந்து ஏழை எளியவர்கள் பசியாற வேண்டும் என்பதற்காக அம்மா கொண்டு வந்தார்.

இப்போது தி.மு.க. ஆட்சியாளர்கள் அந்தந்த திட்டத்தையும் நிறுத்திவிட்டார்கள். கேட்டால் பிரசாதமாக தருவதாக சொல்கிறார்கள். அம்மா இருந்த போது அனைவருக்கும் இலை போட்டு சாப்பாடு வழங்கினார். இது போன்று செய்வதை மாற்றி தில்லுமுல்லு பேசுவது தி.மு.க.வின் வேலையே. எனவே மக்கள் எல்லோரும் இந்த ஆட்சியாளர்களை பற்றி புரிந்து கொள்ள வேண்டும். இப்போது தி.மு.க. ஆட்சியில் அதுபோன்ற நிலைமை இல்லை. போதாத குறைக்கு உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க.வினர் வந்த பிறகு சிறு கடைகளை போட்டு தெருவோரத்தில் காய்கறிகள் கூட விற்க முடியாத நிலைமை உருவாகி விட்டது. இப்போது ஒரு தட்டில் பூ வைத்துக் கூட விற்க முடிய வில்லை என்று மக்கள் குறையாக சொல்கிறார்கள். சென்ற இடங்களில் எல்லாம் மக்கள் குற்றம் சாட்டுகிறார்கள். தி.மு.க.வினர் மாமூல் கேட்கிறார்களாம்.

இளநீர் வியாபாரம் செய்யும் பெண்களை கூட தி.மு.க.வினர் விட்டு வைக்கவில்லை என்று சொல்லி பெண்கள் என்னிடம் கண்ணீர் வடிக்கிறார்கள். தமிழகம் முழுவதும் எல்லா இடங்களிலும் யாரும் சாலைகளில் கடை போட முடியவில்லை. ஒரு தள்ளுவண்டி வைத்துக் கொண்டு கூட வியாபாரம் செய்ய முடியவில்லை. தி.மு.க.வினர் இன்றைக்கு கிராம ஊராட்சியில் தொடங்கி மாநகராட்சி வரைக்கும் மாமூல் வசூல் செய்வதை வேலையாக இருக்கிறார்களாம். இதனை என்னிடமே நேரடியாக மக்கள் சொல்கிறார்கள். ஜெயலலிதா ஆட்சியில் இதுபோன்ற வசூல் வேட்டைகள் மாமூல் எல்லாம் கிடையாது என்பது அனைவருக்கும் தெரியும். அந்த நிலையை மீண்டும் கொண்டு வர வேண்டும். தி.மு.க. ஆட்சியாளர்களுக்கு இப்போது காதில் விழவில்லை என்றாலும் இதற்கு தி.மு.க. அரசு ஒரு கட்டுப்பாட்டை கொண்டுவர வேண்டும். மக்களை கசக்கி பிழிவதை பார்த்துக் கொண்டு நாங்கள் சும்மா இருக்க முடியாது. என்னை பொறுத்த வரை மக்களுக்கு எந்த பிரச்சினை வந்தாலும் நான் தலையிடுவேன் தட்டி கேட்பேன்.

ஜெயலலிதா இருந்திருந்தால் அதை செய்திருப்பார். அம்மா இல்லாத போது அந்த பொறுப்பை அவரின் தங்கை என்ற முறையில் நான் விட மாட்டேன். தமிழகத்தில் மக்களுக்கு எதிரான செயல்களை தி.மு.க. அரசு செய்தால் உடனுக்குடன் என்னிடம் இருந்து தான் கடும் எதிர்ப்பும் கண்டனமும் வரும். தி.மு.க. அரசுக்கு நான் சொல்லிக்கொள்வது உள்ளாட்சியில் தி.மு.க.வில் பதவிக்கு வந்திருப்பவர்களை பணம் வசூல் வேட்டையை முதலில் நிறுத்தச் சொல்லுங்கள். தி.மு.க. அரசு தமிழக மக்களுக்கு உண்மையாகவே நல்லது செய்ய வேண்டும் என்று நினைத்தால் முதல் வேலையாக தி.மு.க. உள்ளாட்சி பிரதிநிதிகள் வசூல் வேட்டையை தடுத்து நிறுத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். நான் மக்களுக்காக குரல் கொடுத்துக்கொண்டே தான் இருப்பேன். மாமூல் வசூல் வேட்டை தி.மு.க. ஆட்சியில் தலைவிரித்து ஆடுகிறது.

காவல் நிலையத்திற்குள்ளே காவல் துறையினர் அவர்களது நாற்காலிகளில் தைரியமாக அமர முடியவில்லை. பாதிக்கப்பட்டவர்கள் காவல் நிலையத்திற்கு சென்று புகார் தர முடியாத நிலைமை தான் இன்றைக்கு உள்ளது. காரணம் தி.மு.க. வினர் உள்ளே நுழைத்து அத்துமீறலில் ஈடுபடுகிறார்கள். அவர்களுக்கு இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள் எழுந்து நிற்கும் நிலைமைதான். சட்டம்-ஒழுங்கை காப்பாற்ற முடியவில்லை. பேணி காக்க முடிய வில்லை. என்ன காரணம் தி.மு.க.வினர் மிரட்டுவது மக்களுக்கே மிகவும் அச்சுறுத்தலாக உள்ளது. தமிழகத்தில் யார் ஆட்சியில் இருந்தால் நல்லது செய்வார்கள் என்பதை மக்கள் தான் முடிவு செய்ய வேண்டும். மக்களாகிய உங்கள் கையில் தான் உள்ளது. வருங்காலம் நன்றாக இருக்கும் மக்கள் யாரும் கவலைப்பட வேண்டாம். உங்களுக்காக நான் குரல் கொடுத்துக் கொண்டே தான் இருப்பேன்.’’ இவ்வாறு சசிகலா பேசினார்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal