தமிழினத் தாய்மார்களை இழிவுபடுத்திய ஆ.ராசாவை கண்டித்து தமிழகமெங்கும் அறவழிப் போராட்டம் நடத்தப்படும் என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை அறிவித்துள்ளார். இது குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையின் விவரம் பின்வருமாறு:-

தமிழகத்தில் தற்போது நடைபெற்று வரும் திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில், தமிழரின் மாண்பையும் தமிழரின் மரபையும் தமிழரின் தொன்மையையும் இறை நம்பிக்கையையும், இழிவுபடுத்தும் செயல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தமிழகத் தாய்மார்களை, தமிழினத்தை அவமதிக்கும் கருத்திற்கு, கோவை மாவட்டத்தில், ஜனநாயக ரீதியாக, எதிர்ப்பு தெரிவித்த, பாஜக தொண்டர்கள் தொடர்ந்து கைது செய்யப்படுவதை கண்டித்து வரும் 26ஆம் தேதி, அறவழியில், சிறை நிரப்பும் போராட்டம் நடத்தப்படும்.

தமிழக காவல்துறை திமுகவின் ஏவல் துறையாக செயல்படுகிறது. தமிழ் இனத்தை, தமிழ்ப் பெண்களை இழிவுபடுத்தி கேவலப்படுத்தும், ஆ ராசா போன்ற ஆளும் கட்சி நபர்களை எல்லாம் கண்டுகொள்ளாத காவல்துறை, ஜனநாயக ரீதியாக அவர்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் பாரதிய ஜனதா கட்சியின் தொண்டர்களையும் நிர்வாகிகளையும் பொய் வழக்கில் கைது செய்து அச்சுறுத்துகிறார்கள். சில திமுக வழக்கறிஞர்கள் நீதிபதிகளையே அச்சுறுத்தி வருகிறார்கள். தூத்துக்குடி வடக்கு, விருதுநகர் மேற்கு, கள்ளக்குறிச்சி, வேலூர், ஈரோடு வடக்கு, கோயம்புத்தூர் நகர், கோவை வடக்கு, மேட்டுப்பாளையம், நீலகிரி சென்னை என்று தொடங்கிய கைது நடவடிக்கை பரவலாக தமிழகம் முழுவதும் தற்போது தொடர்ந்து நடைபெறுகிறது.

இதுவரை நூற்றுக்கும் மேற்பட்ட பாஜக தொண்டர்கள் கைது செய்யப்பட்டு விட்டார்கள். திமுகவின் அராஜகமும் ஆளும் கட்சி என்பதால் நடத்தும் அத்துமீறலும், கண்டிக்கத்தக்கது. மிக விரைவில் இந்த போலி வழக்கும் கைது நடவடிக்கையும் மேலும் அதிகரிக்கக்கூடும் என்று நம்பப்படுகிறது. திமுக பேசினால், கண்களை மூடிக்கொண்டு, அந்த அவலத்தை கண்டுகொள்ளாத காவல்துறை. மறுப்பு தெரிவிக்கும் மக்களை எல்லாம் கைது செய்வது காவல் துறையின் ஓரவஞ்சனையான நடவடிக்கை எடுத்துக்காட்டுகிறது. திமுகவின் பொய் வழக்கைக் கண்டும், கைது நடவடிக்கையைக் கண்டும் எந்த பாஜக தொண்டனும் அஞ்சப்போவதில்லை.

சிறையை கண்டு அச்சப்பட்டு பின்வாங்கும் அலறித் துடிக்கும், சின்ன செயல் எல்லாம் பாஜகவினர் செய்ய மாட்டார்கள். தவறை யார் செய்தாலும் தட்டிக் கேட்க பாஜக தயங்காது. தமிழினத் தாய்மார்களை தரம் தாழ்ந்து பேசிய ஆ.ராசாவை கைது செய்யாமல், பாதிக்கப்பட்டவர்கள் மேல் பொய் வழக்கு போட்டு கைது செய்வது எந்த விதத்தில் நியாயம், காலம் உங்களை கண்டிப்பாக தண்டிக்கும் நாள் வெகு தொலைவில் இல்லை. அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே, துச்சமாக நம்மை எண்ணி தூறு செய்த போதிலும் அச்சம் இல்லை அச்சம் இல்லை அச்சம் என்பது இல்லையே என்று..

மேலும் புதிய வேகத்துடன் புதிய எழுச்சியுடன் கோவை மாவட்டத்தில், தாய்குலத்தை பழித்த, தமிழ் சகோதரிகளை பிறப்பு சொல்லி இழிவு செய்த, ஆ.ராசாவின் அவலத்திற்கு நீதி கேட்டு அறவழியில் போராட்டத்தை, நடத்துவோம். தன்மானம் மிக்க தமிழ் சகோதரிகளே கோவையை நோக்கி திரண்டு வாருங்கள், தாய்மார்களே திரண்டு வாருங்கள். மாபெரும் அறவழிப் போராட்டத்தை வரும் 26ஆம் தேதி நடத்துவோம். மக்கள் ஆளும் கட்சியின் அநீதிக்கு தக்க பாடம் புகட்டுவார்கள் இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal