தி.மு.க.வின் துணைப் பொதுச் செயலாளர் பதவியை சுப்புலட்சுமி ஜெகதீசன் ராஜினாமா செய்தி அதிர்ச்சியிலிருந்து இன்னும் அறிவாலயம் விடுபடவில்லை. இந்த நிலையில்தான் கனிமொழிக்கு துணைப் பொதுச் செயலாளர் பதவி வழங்கப்பட வேண்டும் என அண்ணா அறிவாலயத்திற்கு உ.பி.க்கள் கடிதங்கள் அனுப்புகின்றனர்!

சென்னை அம்பத்தூர் கிழக்குப் பகுதியைச் சேர்ந்த கே.கே.ராஜேந்திரன் என்ற நிர்வாகி முதல்வரும், கட்சித் தலைவருமான ஸ்டாலினுக்கு கடிதம் எழுதியிருக்கிறார். அந்த கடிதத்தில், ‘‘நான் நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக திராவிட முன்னேற்றக் கழகத்திற்காக உழைத்து வருகிறேன்.

தி.மு.க.வில் துணைப் பொதுச் செயலாளர் பதவி காலியாக இருக்கிறது. கழகத்திற்காகவும், கடந்த சட்டமன்றத் தேர்தலிலும் கனிமொழி எம்.பி., தமிழகம் முழுவதும் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அவரது பிரச்சாரம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. எனவே, அவருக்கு துணைப் பொதுச் செயலாளர் பதவி வழங்க வேண்டும்…’’ என அவரது கடிதம் நீள்கிறது.

இதே போல் தென் மாவட்டங்களில் இருந்தும் கனிமொழிக்கு துணைப் பொதுச் செயலாளர் பதவி வழங்க வேண்டும் என அண்ணா அறிவாலயத்திற்கு கடிதங்கள் பறந்து கொண்டிருக்கின்றன!

ஏற்கனவே, துணைப் பொதுச் செயலாளர் பதவிக்கு, பலர் பல்வேறு வகைகளில் முயற்சித்து வருவது குறிப்பிடத்தக்கது!

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal