அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று இரவு 9 மணிக்கு திடீரென்று டெல்லி புறப்பட்டு சென்றார். நேற்று இரவு டெல்லியில் தமிழ்நாடு இல்லத்தில் தங்கினார். இன்று உள்துறை மந்திரி அமித்ஷாவை சந்தித்து பேசினார்.
அ.தி.மு.க.வுக்குள் ஏற்பட்டுள்ள பிரச்சினையில் இ.பி.எஸ்-ஓ.பி.எஸ். இருவரையும் சமாதானப்படுத்த கூட்டணி கட்சி என்ற ரீதியில் பா.ஜனதா பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது. ஆனால் அவை எதுவும் பலன் அளிக்கவில்லை. கூட்டுத் தலைமை என்பதில் ஓ.பன்னீர் செல்வம் உறுதியாக இருக்கிறார். ஒற்றை தலைமை என்பதில் எடப்பாடி பழனிசாமி உறுதியாக இருக்கிறார்.
எனவே இரு அணிகளும் இணைவதற்கான வாய்ப்புகள் இல்லை என்று கூறிவிட்டனர். பெரும்பாலான கட்சி நிர்வாகிகள் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாகவே இருக்கிறார்கள். பெரும்பான்மை பொதுக்குழு உறுப்பினர்கள் ஆதரவுடன் இடைக்கால பொதுச்செயலாளராக அவர் தேர்வு செய்யப்பட்டதை கோர்ட்டும் அங்கீகரித்து உள்ளது. அதேபோல் தலைமை கழக சாவியை எடப்பாடி பழனிசாமியிடம் வழங்கியதையும் சுப்ரீம் கோர்ட்டு சரி என்று அறிவித்துவிட்டது. கட்சி உறுப்பினராக இல்லாத ஓ.பன்னீர் செல்வம் கட்சி அலுவலகத்துக்கு உரிமை கொண்டாட முடியாது என்று அவரது மனுவையும் கோர்ட்டு தள்ளுபடி செய்துவிட்டது.
அமித்ஷாவை சந்தித்து பேசிய போது இந்த தகவல்களையும், கோர்ட்டு தீர்ப்பு நகல்களையும் எடப்பாடி பழனிசாமி அமித்ஷாவிடம் வழங்கி இருக்கிறார். மொத்தம் உள்ள 1660 பொதுக்குழு உறுப்பினர்களில் 1500-க்கும் மேற்பட்டவர்கள் தன்னை ஆதரித்து கையெழுத்து போட்டு கொடுத்த கடித நகல்களையும் அமித்ஷாவிடம் வழங்கி இருக்கிறார்.
மேலும் கட்சியில் ஒற்றுமையுடன் இருக்க வேண்டும் என்று பேசிக்கொண்டே பொதுக்குழு நடைபெற்ற போது அதில் கலந்து கொள்ளாமல் தலைமை அலுவலகத்துக்கு சென்று வன்முறையில் ஈடுபட்டது, கட்சி அலுவலகம் சூறையாடப்பட்டது ஆகியவற்றை எடுத்துக்கூறி அதற்கான கண்காணிப்பு கேமிரா பதிவு காட்சிகளையும் ஆதாரங்களாக வழங்கினார். மேலும் ஓ.பன்னீர் செல்வம் தொடர்ந்து தி.மு.க.வுக்கு ஆதரவான நிலைப்பாட்டில் இருப்பதை கட்சியினர் ஒத்துக்கொள்ளவில்லை என்பதையும் எடுத்து கூறியிருக்கிறார். அதற்கு ஆதாரமாக ஓ.பன்னீர்செல்வம் மகன் ரவீந்திரநாத்குமார் எம்.பி. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து பாராட்டியது, ஓ.பன்னீர் செல்வம் பாராட்டியது பற்றியும் எடுத்துக் கூறினார்.
ஓ.பன்னீர் செல்வத்தின் கட்சி விரோத செயல்பாடுகளால் தொண்டர்கள் அவர் மீது கோபத்தில் இருப்பதாகவும், அதனால் தான் கட்சியில் இருந்து நீக்கிய பிறகும் கட்சியில் யாரும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. அவர் பக்கம் யாரும் செல்லவும் இல்லை என்ற விபரங்களை எடுத்து கூறி இருக்கிறார். எனவே கட்சியின் அதிகாரபூர்வமான பொதுச்செயலாளர் என்ற ரீதியில் கட்சி தொடர்பான அனைத்து தொடர்புகளையும் தங்களோடு மட்டுமே வைத்துக் கொள்ள வேண்டும் என்று கூறியதாக கூறப்படுகிறது.
இந்த சந்திப்பு முடிந்த பிறகு பிற்பகலில் தேர்தல் ஆணையத்துக்கு செல்கிறார். அங்கும் கட்சியின் பொதுக்குழுவில் தன்னை இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்து இருப்பது, தனக்கு ஆதரவாக கோர்ட்டு தீர்ப்பும் வந்திருப்பது ஆகியவற்றுக்கான ஆதாரங்களை சமர்ப்பிக்கிறார். எனவே ஓ.பன்னீர் செல்வம் தரப்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்களை நிராகரிக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறார். டெல்லி நிகழ்ச்சிகளை முடித்து கொண்டு மாலை 6.15 மணிக்கு டெல்லியில் இருந்து கோவை செல்கிறார். இரவு 9.10 மணிக்கு கோவை சென்றடையும் எடப்பாடி பழனிசாமி அங்கிருந்து காரில் சேலத்தில் உள்ள தனது வீட்டுக்கு புறப்படுகிறார்.
சேலத்தில் இருந்து வருகிற 23 அல்லது 24-ந் தேதி சென்னை திரும்ப திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.