தமிழ்நாடு முழுவதும் பல்வேறு வகையான காய்ச்சல்கள் தீவிரமாக பரவி வரும் நிலையில், மாநிலம் முழுவதும் நாளை 1000 இடங்களில் சிறப்பு முகாம் நடைபெறும் என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.

தமிழ்நாடு முழுவதும் கடந்த ஒரு மாதமாக விஷக்காய்ச்சல் பரவி வருகிறது. இந்த காய்ச்சல் கடந்த இருவாரங்களில் மேலும் தீவிரமாக பரவி வருகிறது. இதனால் குழந்தைகள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றன. அதுபோல முதியோர்களும் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னை எழும்பூர் குழந்தைகள் மருத்துவ மனையில் காய்ச்சல் ஏற்படும் குழந்தைகளுக்கு படுக்கை கூட இல்லாத சூழல் ஏற்பட்டுள்ளது. அதுபோல மாவட்ட மருத்துவமனைகளிலும் கூட்டம் நிரம்பி வழிகிறது. ஆனால், தமிழகஅரசு இதை மறுத்து வந்தது. இது வழக்கமாக வரும் காய்ச்சல்தான் என்று கூறியது.

ஆனால், மருத்துவர்கள், H1N1 என்று சொல்லக்கூடிய சுவைன் ப்ளூ பன்றி காய்ச்சல் வேகமாக பரவி வருவதாக தெரிவித்து வருகின்றனர். அதனால் பெற்றோர்கள் மிகுந்த கவனத்துடனும் எச்சரிக்கையுடனும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர்.

இந்த நிலையில், இன்று சென்னையில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், பருவ நிலை மாற்றங்களால் காய்ச்சல் சற்று அதிகரித்துள்ளது என்றும், தற்போதைய நிலையில், இன்புளுயன்சா காய்ச்சலால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,166-ஆக அதிகரித்து இருப்பதாகவும், இது பரவாத வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

மேலும், காய்ச்சலை தடுக்கும் வகையில் நாளை, தமிழ்நாடு முழுவதும் 1,000 இடங்களில் சிறப்பு காய்ச்சல் முகாம் நடைபெற உள்ளது என அறிவித்தார். பொதுமக்கள், சளி, தலைவலி, இருமல் உள்ளிட்ட பாதிப்பு இருப்பவர்கள் சிறப்பு காய்ச்சல் முகாம்களுக்கு சென்று பரிசோதனை செய்து சிகிச்சை பெறலாம் என்றும் நோயாளிகளுக்கு நடமாடும் மருத்துவ வாகனங்கள் மூலமும் பரிசோதனைகள் நடைபெறுகிறது. அதனால் யாரும் பயப்பட வேண்டாம் எனவும் தெரிவித்தார்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal