ஒரு எம்.எல்.ஏ.வை கொண்ட தொகுதிக்கு இரண்டு பொதுக்குழு உறுப்பினர்களை தேர்வு செய்ய வேண்டும் என்று துரைமுருகள் அறிவிப்பு வெளியிட்டிருக்கிறார்.

தி.மு.க. பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டு உள்ள அறிவிப்பில் கூறி இருப்பதாவது:-

‘‘ தி.மு.க. 15-வது பொதுத் தேர்தலில் பேரூர், ஒன்றிய, நகர, பகுதி, மாநகரத் தேர்தல் முடிவுற்றதைத் தொடர்ந்து இப்போது நடைபெற உள்ள மாவட்ட அமைப்புகளுக்கான தேர்தலில் மாவட்டக் கழக உறுப்பினர்கள் ஒன்று கூடி, மாவட்டக் கழகத்திற்கு என ஒரு அவைத் தலைவர், ஒரு செயலாளர், ஒரு பொருளாளர், துணைச் செயலாளர்கள் 3 பேர் (கட்டாயமாக ஒருவர் பொதுப்பிரிவினராகவும், ஒருவர் ஆதிராவிடர் அல்லது மலைவாழ் வகுப்பினராகவும், ஒருவர் மகளிராகவும் இருத்தல் வேண்டும்) ஆகிய அலுவளர்களையும், கழக நிர்வாக வசதிக்கேற்ப பிரிக்கப்பட்ட தத்தமது மாவட்டக் கழகத்தில் எத்தனை சட்ட மன்றத் தொகுதிகள் உண்டோ, அந்த எண்ணிக்கைக்கு ஏற்ப, அத்தனை தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும்.

அதைப் போலவே, மாவட்டக் கழகத்தில் எத்தனை சட்டமன்றத் தொகுதிகள் உண்டோ, அந்த எண்ணிக்கைக்கு ஏற்ப, ஒரு தொகுதிக்கு 2 பொதுக்குழு உறுப்பினர்கள் வீதம் (மாவட்டத்தில் உள்ள பொதுக்குழுவில் கண்டிப்பாக ஒருவர் மகளிராக இருத்தல் வேண்டும்), மாவட்டக் கழகப் பிரதிநிதிகளால் தேர்ந்தெடுக்க வேண்டும்’’ இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal