திமுகவில் துணை பொதுச்செயலாளராக இருந்த சுப்புலட்சுமி ஜெகதீசன் அரசியலுக்கு முழுக்கு போட்டுள்ளதால், அவர் வகித்த பதவிக்கு பூங்கோதை ஆலடி அருணாவின் பெயர் பரிசீலனையில் இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

முன்னாள் அமைச்சர், மகப்பேறு மருத்துவர், பாரம்பரிய தி.மு.க. அரசியல் பின்னணியை சேர்ந்த குடும்பம், எல்லாவற்றுக்கும் மேலாக முதல்வர் ஸ்டாலின் மீதான அதீத விசுவாசம் கொண்டவர். கடந்த சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றிருந்தால் அமைச்சராகியிருப்பார். துரதிர்ஷ்ட வசமாக ‘உள்ளடி வேலைகளால்’ வெற்றி வாய்ப்பை நூலிழையில் இழந்தவர்.

இதனால் சற்குணப் பாண்டியன், சுப்புலட்சுமி ஜெகதீசன் வரிசையில் பூங்கோதையும் திமுகவில் துணைப் பொதுச்செயலாளர் பதவியை அலங்கரிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. திமுகவை பொறுத்தவரை தலைவர், பொதுச்செயலாளர், பொருளாளர், முதன்மைச் செயலாளர் ஆகிய பதவிகளுக்கு அடுத்தபடியாக துணைப் பொதுச்செயலாளர் பதவி மிக முக்கியமானது. பொதுக்குழு, செயற்குழு, மாநாடு, உள்ளிட்ட கட்சி சார்ந்த அனைத்து முக்கிய நிகழ்வுகளிலும் தலைவரோடு ஒரே வரிசையில் மேடையில் அமரும் வாய்ப்பு துணை பொதுச்செயலாளர்களுக்கு கிடைக்கும்.

அந்த வகையில் தற்போதைய நிலவரப்படி திமுக துணை பொதுச்செயலாளர்களாக ஐ.பெரியசாமி, சுப்புலட்சுமி ஜெகதீசன், அந்தியூர் செல்வராஜ், ஆ.ராசா, பொன்முடி, ஆகியோர் இருக்கின்றனர். இதனிடையே சற்குணபாண்டியன் உயிருடன் இருந்தபோது அவர் வகித்து வந்த துணைப் பொதுச்செயலாளர் பதவியை கனிமொழிக்கு கொடுக்குமாறு ராஜினாமா செய்து அதை கருணாநிதி ஏற்க மறுத்தது தனிக்கதை. சற்குணபாண்டியன் மறைவை அடுத்து மகளிர் கோட்டாவில் அந்த இடத்திற்கு பரிசீலிக்கப்பட்டவர் பூங்கோதை ஆலடி அருணா.

ஆனால் பூங்கோதை ஆலடி அருணா ஜூனியர் எனக்கூறி இரண்டாம் கட்டத் தலைவர்கள் சிலர் அப்போது ஆட்சேபனை தெரிவித்ததால் மீண்டும் சுப்புலட்சுமி ஜெகதீசன் 2015-ம் ஆண்டு திமுக துணைப் பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டார். தற்போது அரசியலில் இருந்தே விலகுவதாக சுப்புலட்சுமி ஜெகதீசன் அறிவித்துள்ளதால், அவர் வகித்து வரும் துணைப் பொதுச்செயலாளர் பதவிக்கு பூங்கோதை ஆலடி அருணா பெயர் மீண்டும் பரிசீலனையில் உள்ளது.

சுப்புலட்சுமி ஜெகதீசனிடம் முடிந்த வரை துரைமுருகன் சமாதானம் செய்தும் அவர் அதை ஏற்க மறுத்ததால் அவரது இடத்திற்கு புதிதாக பெண் ஒருவரை நியமிக்க வேண்டிய பொறுப்பு திமுக தலைமைக்கு ஏற்பட்டுள்ளது.

அந்த வகையில் முதல்வர் ஸ்டாலினிடம் அதீத விசுவாசத்தோடு இருக்கும் பூங்கோதை ஆலடி அருணாவுக்கு ஜாக்பாட் அடித்தால் அதில் ஆச்சரியப்படுவதற்கு எதுவுமில்லையாம். மேலும் தென் மாவட்டங்களில் நாடார் சமுதயாத்திற்கு பிரதிநிதித்துவம் கொடுத்த மாதிரியும் இருக்கும் என்பதால், முதல்வர் ஸ்டாலின் தீவிர யோசனையில் இருக்கிறாராம்!

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal