அ.தி.மு.க.விலிருந்து தி.மு.க.விற்கு வந்தவர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது என்று தி.மு.க.வின் மூத்த முன்னோடிகள் புலம்பிக் கொண்டிருந்தனர். இந்த நிலையில்தான் தி.மு.க.வின் மூத்த தலைவரும், கட்சியின் துணைப் பொதுச்செயலாளருமான சுப்புலட்சுமி ஜெகதீசன் கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்திருப்பது தி.மு.க.வில் உள்ள மூத்த தலைவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
தி.மு.க.,வில் இருந்து விலகுவதாக முன்னாள் எம்பி. சுப்புலட்சுமி ஜெகதீசன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, ‘‘ கடந்த 2009 ல் எனது எம்பி., பதவி முடிந்ததும் நான் தேர்தலில் போட்டியிடவில்லை என்றும் கட்சி பணியை மட்டும் தொடர்வதாக அப்போதைய தலைவர் கருணாநிதியிடம் தெரிவித்திருந்தேன். தொடர்ந்து 2021 தேர்தலில் அரும் பணியாற்றி முதல்வராக ஸ்டாலின் பொறுப்பேற்றார். இவர் மக்கள் போற்றும் வகையில் ஆட்சி புரிந்து வருகிறார். இந்த மன நிறைவோடு நான் எனது நீண்ட கால ஆசையை நிறைவேற்றி கட்சி பொறுப்பில் ( திமுக துணை பொது செயலர் ) இருந்து விலகி கொள்கிறேன்.
இதற்கான கடிதத்தை ஆக.29 ம் தேதி ஸ்டாலினுக்கு அனுப்பி வைத்து விட்டேன்.’’ இவ்வாறு அவர் கூறியுள்ளார். பொறுப்பில் இருந்தும் அவர் விலகி கொள்கிறார்.
சுப்புலட்சுமி கணவர் ஜெகதீசனும் தி.மு.க., காரர். சமீபகாலமாக மனைவிக்கு கட்சியில் முக்கியத்துவம் குறைந்ததால், கடுப்பான கணவர் ஜெகதீசன் தி.மு.க.,வையும், கட்சி தலைமையையும் கடுமையாக விமர்சித்து சமூக வலைதளங்களில் எழுதி கொண்டிருந்தார்.
கணவரின் விமர்சனத்திற்கு சுப்புலட்சுமி எந்த எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை. எனவே, சுப்புலட்சுமியின் சம்மதத்தோடு தான் ஜெகதீசன் விமர்சனங்களை செய்து வந்ததாக கூறப்படுகிறது. கட்சி மீது தனக்கு இருந்த அதிருப்தியை கணவர் மூலம் சுப்புலட்சுமி காட்டியதாக கட்சியினர் பேசிக்கொண்டனர்.
இனிமேல், தி.மு.க.,வில் தனக்கு எதிர்காலம் இருக்காது என்று, நன்கு தெரிந்ததால் தான் சுப்புலட்சுமி கட்சிக்கு முழுக்கு போட்டுள்ளார் என்று தி.மு.க., நிர்வாகி ஒருவர் தெரிவித்தார்.
ஈரோடு மாவட்டத்தில் உள்ள முக்கிய நிர்வாகிகள் சிலரிடம் பேசியபோது, ‘‘கடந்த சட்டமன்றத் தேர்தலில் சுப்பு லட்சுமி ஜெகதீசனின் தோல்விக்கு காரணமாக இருந்தவர்களுக்கு, மீண்டும் கட்சியில் பொறுப்பு வழங்கியதால்தான், அதிருப்தியில் விலகியிருக்கிறார்’’ என்றனர்.
தி.மு.க., ஆளுங்கட்சியாக இருக்கும் நேரத்தில், ஆளுங்கட்சியை சேர்ந்த மூத்த தலைவர் பதவி விலகியது அக்கட்சிக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.